கிளாப் விமர்சனம்: வித்தியாசமான பரிணாமத்தில் வெளிவந்திருக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கான அசத்தல் படம் – ரேட்டிங்:2.5/5

0
168

கிளாப் விமர்சனம்: வித்தியாசமான பரிணாமத்தில் வெளிவந்திருக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கான அசத்தல் படம்

ரேட்டிங்:2.5/5

பிக் பிரிண்ட் கார்த்தி தயாரித்திருக்கும் கிளாப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரித்வி ஆதித்யா. இப்படம் சோனி லைவ் தளத்தில் வெளிவந்துள்ளது.
இதில்  ஆதி, பிரகாஷ் ராஜ், நாசர்,ஆகான்ஷா சிங், கிரிஷா க்ரூப், கார்த்திகேயன், பிரம்மா ஜி, மைம் கோபி, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை : இளையராஜா,ஓளிப்பதிவு : பிரவீன் குமார், எடிட்டர்: ரகுல், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா.

தேசிய அளவிலான தடகள வீரரான கதிர் (ஆதி) ஒரு பெரிய சாலை விபத்தில் சிக்க அதில் அவரது தந்தை (பிரகாஷ் ராஜ்) கொல்லப்பட, இதில் ஒரு கால் உறுப்பை இழக்கிறார். இதைத் தொடர்ந்து தேசிய தடகள சாம்பியன்ஷிப் கோப்பை வெல்லும் அவரது கனவு கலைந்து விடுகிறது.இந்த சம்பவம் மற்றும் மனஉளைச்சல் கதிரின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும், ஹாக்கி வீராங்கனையான காதலி மித்ரா விடாப்பிடியாக கதிரை திருமணம் செய்து கொள்கிறார்.கதிர் மன உளைச்சலால் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருப்பதால் மனைவி மித்ரா (ஆகன்ஷா சிங்) உடனான உறவைப் பாதித்து பேசுவதையும் நிறுத்திவிடுகிறார். தந்தையின் வருமான வரி அலுவலகத்தில் வேலை கிடைக்க, மித்ராவும் வேலைக்கு சென்று ஹாக்கி விளையாட்டு பயிற்சியையும் மேற்கொள்கிறார். ஆனால் கதிரால் இழந்த விளையாட்டு வாழ்க்கைக்கு செல்ல முடியாமல் தவிக்க, மாநில அளவில் சாதித்த ஏழைச்சிறுமியான தடகள வீராங்கனை பாக்கியலட்சுமியின் (கிரிஷா க்ரூப்) இளம் வயது சாதனையை அறிந்து அவளை தேசிய அளவில் சாதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். பல போரட்டங்களுக்கு பிறகு வீராங்கனை பாக்கியலட்சுமியை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். மனைவி மித்ரா இவர்களுக்கு தடங்கல்களை ஏற்படுத்தாமல் பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுகிறார். ஆறு வருடங்களுக்கு முன் விளையாட்டு திடலில் வெங்கட்ராம்(நாசர்) மற்றும் அவரது மகனை அவமரியாதை செய்யும் கதிரை பழி வாங்க தற்போது தடகள சங்க அதிகாரியாக பதவி வகிக்கும் வெங்கட்ராம் காத்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே கதிர் சிறந்த பயிற்சியாளரை அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அவர்களை அணுக, அனைவருமே வெங்கட்ராமின் மிரட்டலால பின் வாங்குகின்றனர். இதனால் விரக்தி; அடைந்தாலும், பாக்கியலட்சுமிக்கு கதிர் தானே பயிற்சியாளராக இருந்து கிளாப் அடித்து கடின பயிற்சி கொடுக்கிறார். பாக்கியலட்சுமி என்ற பெயரை மாற்றி துர்கா என்று பெயர் மாற்றம் செய்து போட்டியில் கலந்து கொள்ள வைக்கிறார். இது பெரிய சர்ச்சையானாலும், மீடியாவின் வெளிச்சத்தால் தேசிய அளவிளான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகிறார். இந்தப் போட்டியில் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றாரா? வெங்கட்ராமின் சூழ்ச்சியிலிருந்து தப்பித்தாரா? கதிரின் கனவை நினைவாக்கினாரா? மனைவி மித்ரா என்ன உதவி செய்தார்? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.

கதிராக ஆதி கட்டுடல் கொண்ட பயிற்சி பெற்ற தடகள வீரராக, தந்தையின் கனவை நனவாக்க துடிக்கும் மகனாக, முழங்கால் உறுப்பை இழந்து அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு, தடகள ஆசை நிராசையானதால் கால் இழந்ததை நினைக்கும் போது ஏற்படும் வலி, துடிப்பை தாங்காமல் அலறும் வீரராக, மனைவியிடம் சகஜமாக பழக முடியாத தாழ்வு மனப்பான்மை கணவனாக, ஒரு சிறுமியின் தடகள ஆசையை நிறைவேற்றும் பயிற்சியாளராக என்று பன்முக நடிப்பு படத்தில் கச்சிதமாக பொருந்தி மாற்றுதிதிறனாளி தடகளவீரர் கதாபாத்தித்தில் வைர மகுடம் போல் மின்னுகிறார். இறுதிக் காட்சியில் அந்தப்பெண் பெற்றி பெறுவதை காட்டாமல் ஆதியே ஒடி வெற்றி பெறுவதுபோல் மனதில் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், தந்தையின் கனவு நனவாவது போல் சித்தரித்திருக்கும் விதமும் அற்புதம்.

காதல் மனைவி மித்ராவாக ஆகான்ஷா சிங் கணவனை நன்கு புரிந்து கொண்டு நடக்கும் மனைவியாக, எந்த ஒரு இடர்பாடுகள் இருந்தாலும் அதை பொறுமையாக கையாளும் கதாபாத்திரம், இறுதிக்காட்சியில் இவரின் பங்களிப்பால் தான் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து கதையின் முக்கியபுள்ளியாக இருக்கிறார்.

பாக்கியலட்சிமியாக கிரிஷா க்ரூப் தடகள வீராங்கனையாக சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியாக  துடிப்புமிக்க சாதிக்க பிறந்த இளம்பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் உத்வேகமிக்கவராக களமிறங்கி மிளிர்கிறார்.

இவர்களுடன் தந்தையாக பிரகாஷ் ராஜ்,வில்லனாக தடகள சங்க உயர் அதிகாரியாக நாசர், கார்த்திகேயன், பிரம்மா ஜி, மைம் கோபி, முனிஷ்காந்த் ஆகியோர் தங்கள் நிலையை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை, அறிமுகப் பாடல் மற்றும்; திரைப்படத்தை சரியான இடங்களில் அளவோடு தூக்கி நிறுத்தியிருக்கிறது.
விளையாட்டு சம்பந்தமான காட்சிகள் தத்ரூபமாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் காட்சிக் கோணங்களில் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்.

ரகுல் எடிட்டிங் கொஞ்சம் சுறுசுறுப்பாக செய்திருக்கலாம்.

விளையாட்டு சம்பந்தமான கதைக்களங்களில் பொதுவாக விளையாட்டு வீரர் வாழ்க்கையில் ஜெயிக்க அதனை மறந்து பின்னர் இறுதியில் பல பயிற்சிகளை செய்து வெற்றி பெறுவார் என்பது ஒரு வகை என்றால், அதேபோல, விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வு பெறவும் நடத்தும் உரிமைப்போராட்டங்களின் பின்னணி இன்னொரு வகை. இதில் இரண்டும் உண்டு என்றாலும் மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதையில் மாற்றுத்திறனாளியான தடகள வீரர் தன்னுடைய கனவை நனவாக்க இன்னொருவருக்கு பயிற்சியாளராக இருந்து வழிநடத்தி போராடி வெற்றி பெறுவதே படத்தின் திரைக்கதை. பொருத்தமான டைட்டில் களத்தில் முதல் பாதியில் வித்தியாசமான கோணத்தில் பயணித்தாலும் இரண்டாம் பாதியில் இரண்டு பேர்களின் பகையால் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தியிருப்பது ஏற்கனவே கனா, ஜீவா, இறுதிச்சுற்று போன்ற பல படங்கள் மையப்படுத்தியிருப்பதால் ஊகிக்கக்கூடியவையாக இருந்தாலும், அதை திருப்பங்களுடன் கொடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் பிரித்வி ஆதித்யா. அதே சமயம் விபத்து ஏற்பட்ட பிறகு அதிலிருந்து மீண்டு உத்வேகத்துடன் மாற்றுத்திறனாளிகள்; விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் கோணத்திலும் யோசித்திருந்தால் இன்னும் விழிப்புணர்வுடன் இருந்திருக்கும் இயக்குனர் பிரித்வி ஆதித்யா.

மொத்தத்தில் பிக் பிரிண்ட் கார்த்தி தயாரித்திருக்கும் கிளாப் முயற்சி திருவினையாக்கும் என்பது போல் போராடி வெற்றி பெற சாதிக்க துடிக்கும் தாழ்த்தப்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி  விளையாட்டில் ஈடுபாடு ஏற்பட செய்யும் வித்தியாசமான பரிணாமத்தில் வெளிவந்திருக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கான அசத்தல் படம்.