கார்பன் விமர்சனம்: வெற்றியை பார்ப்பான், அனைவரையும் கவர்வான்

0
182

கார்பன் விமர்சனம்: வெற்றியை பார்ப்பான், அனைவரையும் கவர்வான்

பென்ஞ் மார்க் பிலிம்ஸ் சார்பில் ஆ.பாக்யலட்சுமி, மு.ஆனந்தஜோதி மற்றும் ஆர்.சீனுவாசன் ஆகியோர் தயாரித்திருக்கும் கார்பன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.சீனுவாசன்.
இதில் விதார்த், தான்யா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், அஜய் நட்ராஜ், வினோத் சாகர், விக்ரம் ஜெகதீஷ், பவுலின், பிச்சைக்காரன் மூர்த்தி, டவுட் செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-விவேகானந்த் சந்தோஷம், இசை-சாம்.சி.எஸ், எடிட்டிங்-பிரவீன் கே.எல், ஸ்டண்ட்-கனல் கண்ணன், கலை-ஜெயச்சந்திரன், பாடல்கள்-அருண்பாரதி, தமிழணங்கு, பாடகர்கள்-ஹரிச்சரன், சத்யபிரகாஷ், சின்மயி, நடனம்- விஜி சதிஷ், பிஆர்ஒ- சுரேஷ்சந்திரா, ரேகா.

போலீசில் சேரவேண்டும் என்று லட்சியத்துடன் முயற்சி செய்து கொண்டிருக்கும் விதார்த்திற்கு சிறு வயதிலிருந்தே கனவில் வருவதெல்லாம் உண்மையாக சம்பவங்கள் நடக்கும். அது போல் அன்றும் நடைபயிற்சியின் போது கார் ஒன்று வந்து மோதுவது போல் கனவு காண, மறுநாள் அதிகாலையில் அதே இடத்தில் கார் வர ஒதுங்கும் விதார்த் கிழே விழுந்து அடிபடுகிறார். தாய் இறந்து விட, தாம்பரம் நகராட்சியில் குப்பை லாரி ஒட்டும் டிரைவராக வேலை செய்யும் தந்தை மாரிமுத்துவுடன் வாழும் விதார்த் வேலை கிடைத்தவுடன் தான் தந்தையிடம் பேச வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜில் தகவல் அனுப்பி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். தந்தையின் நச்சரிப்பு தாங்காமல் லட்சியத்தை ஒதுக்கிவைத்து விட்டு தற்காலிகமாக வேலை தேடிக்கொள்கிறார். முதல் மாதம் சம்பளம் வாங்கிவிட்டுத்தான் தந்தையிடம் பேச வேண்டும் என்று இருக்க, ஒருநாள் தந்தை கருப்பு நிற கார் மோதி விபத்து ஏற்படுவது போல் கனவு காண, தந்தையை காப்பாற்ற ஓடும் விதார்த்தால் அதை தடுக்க முடியாமல் போக, தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தந்தையை சேர்க்கிறார். தந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்பட, மனக்குழப்பத்தில் இருக்கும் விதார்த்திற்கு விபத்து ஏற்படுத்திய நபர் கிடைத்தால் பணம் கேட்டு தந்தையின் உயிரை காப்பாற்றலாம் என்று நினைக்கிறார். ஆனால் யார் விபத்தை ஏற்படுத்தியது என்பது புரியாத புதிராக இருக்க, மருத்துவமனையில் வேலை செய்யும் பணிப்பெண் விதார்த்திடம் மீண்டும் கனவு வருமாறு செய்தால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கலாம் என்று கூறுகிறார். அதற்கு கனவு வந்த அன்றைக்கு என்ன செய்தாரோ, யாரை பார்த்தாரோ, அவர்களை எல்லாம் மீண்டும் பார்த்தால் அதே கனவு வரும் என்று நம்புகிறார். இந்த தேடுதலில் தான்யாவை சந்திக்க காதல் ஏற்படுகிறது. தான்யாவின் உதவி விதார்த்திற்கு பயன் தந்ததா? அவருக்கு கனவு வந்ததா? விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தாரா? கொலை சதியிலிருந்து தப்பித்தாரா? என்பதே படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.

சங்கராக விதார்த் ஒளிவுமறைவோடு அப்பா மீது பாசம், விபத்தில் சிக்கிய அப்பாவை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள், தானாகவே வந்து மாட்டும் காதலி தான்யா, அவரின் நம்பிக்கை மோசடியை ஜீரணிக்க முடியாமல் தவிப்பது, விபத்துக்கு காரணமான காரை வைத்து குற்றவாளியை கண்டுபிடித்து அதிர்வது என்று ஒவ்வொரு காட்சியிலும் அசத்திடும் நடிப்பை வெளிப்படுத்தி கனவு வளையத்தை வரவழைக்க போராடும் இளைஞராக, சாதுர்யமாக காயை நகர்த்தி உண்மையான காரணத்தை கண்டு பிடித்து. அதை முறியடிக்கும் வித்தியாசமான களத்தில் அதிரடி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி அசத்திவிடுகிறார் விதார்த்.

ஸ்வப்னாவாக தான்யா பாலகிருஷ்ணன் காதலியாக முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் முதலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக, பயந்து பயந்து பேசி என்ட்ரி n;காடுத்து, பின்னர் அவரின் சுயரூபம் வெளிப்பட்ட பிறகு அனைவரையும் மிரட்டும் வண்ணம் தைரியமான சிலை கடத்தல் பிசனஸ் செய்யும் மாடர்ன் பெண்ணாக காட்டப்படும் காட்சிகளில் அதகளம் பண்ணியிருப்பது படத்தில் எதிர்பாராத திருப்பம் சிறப்பாக செய்துள்ளார்.

பாசக்கார சுப்புராயன் அப்பாவாக மாரிமுத்து மகன் மீது அன்பை பொழிந்து அதட்டலுடன் பேசுவதாகட்டும், பின்னர் படுத்த படுக்கையாகி மகனின் கவனிப்பால் காப்பாற்றப்பட இறுதிக்காட்சியில் அனைவரையும் சிரிக்க வைத்து மனதில் நிற்கிறார்.

இவர்களுடன் மூணார் ரமேஷ், அஜய் நட்ராஜ், வினோத் சாகர், விக்ரம் ஜெகதீஷ், பவுலின், பிச்சைக்காரன் மூர்த்தி, டவுட் செந்தில் அனைவருமே முக்கியமான கதாபாத்திரம் படத்திற்கு பலம்.

விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு ஒரு நாளையே உருவாக்கம் செய்திருக்கும் முயற்சியில் அசத்தலான காட்சிக் கோணங்கள் குறை சொல்ல முடியாத வண்ணம் இருக்கிறது.

சாம் சி.எஸ்.பாடல்கள் படத்தின் ஒட்டத்திற்கு சிறப்பாக துணை செல்கிறது.
பிரவீன் கே.எல் படத்தொகுப்பு படத்தை தோய்வில்லாத வண்ணம் எடுத்துச் செல்ல உதவுகிறது.ஸ்டண்ட்-கனல் கண்ணன், கலை-ஜெயச்சந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

எழுத்து., இயக்கம்-ஆர்.சீனுவாசன். நாயகன் காண்கின்ற கனவு நிஜத்திலும் நடக்க, அப்படி நாயகன் தனது தந்தையை பற்றி காணும் கனவு நிஜமாகிறது. இதன்பின் என்ன நடக்க போகிறது என்பதை (டிரிம் டைம் லூப்) கனவு நேர வளையத்தில் சிக்கிக்கொண்ட நாயகனின் கதைக்களமாக கொண்ட ‘கார்பன்’ ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க செய்துள்ளார் இயக்குனர் ஆர்.சீனுவாசன். மற்ற டைம் லூப் படங்களைப்போல் இல்லாமல் கனவை வரச்செய்ய அந்த நாளையே மறுஉருவாக்கம் செய்ய முற்படும் நாயகன், பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள, தான் மறுஉருவாக்கம் செய்த கதாபாத்திரங்ளை வைத்தே எதிரியின் கொலை சதி திட்டத்திலிருந்து விடுபடும் சாதுர்யமான க்ளைமேக்சை கொடுத்து திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆர்.சீனுவாசன். கார்பன் பல விருதுகளை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் பென்ஞ் மார்க் பிலிம்ஸ் சார்பில் ஆ.பாக்யலட்சுமி, மு.ஆனந்தஜோதி மற்றும் ஆர்.சீனுவாசன் ஆகியோர் தயாரித்திருக்கும் கார்பன் நகலகம் அல்ல அச்சு அசல் அக்மார்க்; ஒரிஜினல் அசத்திடும் வெற்றியை பார்ப்பான், அனைவரையும் கவர்வான்.