கள்ளன் விமர்சனம்: கள்ளன் படத்திக்கேற்ற டைட்டிலுடன், சூப்பர் மேக்கிங்கில் கில்லியாக களமிறங்கி வெற்றி நடைபோடும் | Rating – 3 Star

0
246

கள்ளன் விமர்சனம்: கள்ளன் படத்திக்கேற்ற டைட்டிலுடன், சூப்பர் மேக்கிங்கில் கில்லியாக களமிறங்கி வெற்றி நடைபோடும் | Rating – 3 Star

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்து இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் கள்ளன்.
இதில் கருபழனியப்பன், நமோநாராயணன், சௌந்தர்ராஜா, நிகிதா, மாயா, வேலா ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்கள்- எம்.எஸ்.பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன்,  இசை-கே,  படத்தொகுப்பு- எஸ்.பி.அகமது. பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.

வேட்டையாடும் தொழிலை செய்யும் வேலா ராமமூர்த்தியின் மகன் கருபழனியப்பன், சிறுவயதில் தந்தையிடம் துப்பாக்கி செய்வதை கற்றுக்கொள்கிறார். தந்தை இறந்த பிறகு வேட்டையாடும் தொழிலை செய்கிறார். வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்பதாலும் போலீசின் கெடுபிடியாலும், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். அதன் பிறகு நண்பர்கள் இருவரின் யோசனைப்படி கள்ள துப்பாக்கி செய்து நன்றாக சம்பாதிக்க தொடங்குகிறார். போலீஸ் இதனை கண்டுபிடித்து கருபழனியப்பனையும், நண்பர்களையும் பிடிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். மூவரும் கள்ள துப்பாக்கி செய்யும் தொழிலை விட்டு விட்டு அந்த ஊர் செல்வந்தர் வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் தீட்டி திருட செல்கின்றனர். அங்கே எதிர்பாராதவிதமாக கொலையும் நடக்க மூவரும் வசமாக மாட்டிக் கொள்ள, தப்பித்து வேறு திசையில் ஒடுகின்றனர். ஒரு வீட்டில் ஒளிந்து கொள்ளும் கருபழனியப்பன், அந்த வீட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் தொல்லை அனுபவிக்கும் நிகிதாவை காப்பாற்றுகிறார். அங்கிருந்து கருபழனியப்பனுடன் நிகிதாவும் கேரளா செல்கின்றார். அங்கே அடைக்கலம் கொடுக்கும் நண்பர் மூலம் கள்ளத்துப்பாக்கி செய்து நிகிதாவுடன் வாழ்கிறார். அங்கேயும் பிரச்னை ஏற்பட, போலீஸ் கரு பழனியப்பனை கைது செய்கிறது. நண்பர்களும் மாட்டிக் கொள்ள, சிறையில் மூவரும் அடைக்கப்படுகின்றனர். அங்கே நமோ நாராயணின் நட்பு கிடைக்கிறது. தனக்கு தூக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றெண்ணி மனைவி நிகிதா மீண்டும் வளர்ப்புத் தந்தையிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சிறையிலிருந்து தப்பிக்க கருபழனியப்பன் திட்டம் போடுகிறார். இதற்கு நமோ நாராயணன், மற்றும் கூட்டாளிகள் சம்பதம் சொல்ல கருபழனியப்பன் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து நமோ நாரயணன் தம்பி சொளந்தர்ராஜா உதவியோடு சிறையிலிருந்து ஒட்டுமொத்தமாக தப்பிக்கின்றனர். மனைவி நிகிதாவை நமோ நாராயணன் மனைவி மாயாவிடம் ஒப்படைத்துவிட்டு, இறுதியாக வாழ்க்கையில் செட்டில் ஆக பல லட்சங்கள் புழங்கும் ஒரு கிளப்பில் கொள்ளயடித்து பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர். அவர்கள் தீட்டிய திட்டம் போல் அனைவரும் கச்சிதமாக கொள்ளையடித்து வெளியே வரும் போது போலீஸ் வந்து விடுகிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிந்து தப்பிச் செல்கின்றனர். கொள்ளைடித்த பணம் நமோ நாராயணனிடம் இருக்க, பத்திரமாக தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று விடுகிறார். மற்றவர்கள் தப்பித்து நமோ நாராயணன் வீட்டிற்கு பணத்தை பங்கு போட வருகின்றனர். அதன் பின் நமோநாராயணன் எடுக்கும் முடிவு என்ன? மனைவி மாயா செய்த காரியம் என்ன? இறுதியில் அனைவரின் தலையெழுத்தும் ஒட்டு மொத்தமாக மாற காரணம் என்ன? என்பதே படத்தின் முடிவு.

வேட்டைக்காரனாக இருந்து கள்ளத் துப்பாக்கி செய்து கொலை, கொள்ளை என்று வாழ்க்கை தடம் மாறிச் செல்ல அதலிருந்து தப்பிக்க எடுக்கும் ஒட்டம், எடுக்கும் முடிவு என்று கரு.பழனியப்பன் கிராமத்து இளைஞராக  பணத்தாசைக்காக இல்லாமல் அன்றாட தேவைக்காக அல்லல்படும் நிலையை கண் முன்னே யதார்த்தமாக நிறுத்துகிறார். முக பாவனை ஒத்து வரவில்லை என்றாலும் வசனம் மற்றும் உடல் மொழியால் சமாளித்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நமோநாராயணன் முதலில் உதவி செய்பவராக இருந்து மனைவிக்காக தடம் மாறும் குணத்தோடு இயல்பாக செய்து கை தட்டல் பெறுகிறார். இவரின் தம்பியாக சௌந்தர்ராஜா இடைவேளைக்குப்பிறகு வந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக செய்துள்ளார்.

சோகமே உருவான நிகிதா, உருட்டும் விழிகளோடு மிரட்டல், அதட்டல், குத்தல் பேச்சு என்று அசத்தலான நடிப்பு. படத்தின் க்ளைமேக்ஸ் மாறக் காரணம் வில்லியாக வரும் பேராசை மாயா தான்.

தந்தையாக வேலா ராமமூர்த்தி மற்றும் பல கிராமத்து மக்கள் படத்தின் ஆணிவேறாக உறுதியாக பலம் சேர்த்துள்ளனர்.

எம்.எஸ்.பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் செயல்பட்டு வித்தியாசமான கிராமத்து கதைக்களத்திற்கு ஜீவன் சேர்த்துள்ளனர்.

கே படத்திற்குகேற்ற இசையை சிறப்பாக கொடுத்துள்ளார்.

எஸ்.பி.அகமது படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கு உத்திரவாதம்.

தெரிந்த தொழிலை செய்யமுடியாமல் தெரியாத தொழிலை செய்து மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சியில் கிராமத்து இளைஞன் வாழ்க்கை போராட்டமே கதைக்களமாக கொண்டு அதில் காதல், நட்பு, பகை, சூழ்ச்சி, வீழ்ச்சி என்று வித்தியாசமான கோணத்தில் சுவாரஸ்யம் குறையாமல், விறுவிறுப்பாக காட்சிகளோடு படம் நகர இறுதிக் காட்சியில் ஒரு திருப்பத்தை கொடுத்து சிறப்பாக தன் திறமையையும், உழைப்பையும் வெற்றிக்கனியாக மாற்றியுள்ளார் பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற முகங்களை தாண்டி சிறந்த இயக்குனர் என்ற புது அவதாரம் எடுத்திருக்கிறார் சந்திரா தங்கராஜ். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள கள்ளன் படத்திக்கேற்ற டைட்டிலுடன், சூப்பர் மேக்கிங்கில் கில்லியாக களமிறங்கி வெற்றி நடைபோடும்.