கருணாநிதி பிறந்த நாளில் ‘விக்ரம்’ ரிலீஸ் ஏன்? – கமல்ஹாசன் பதில்

0
144

கருணாநிதி பிறந்த நாளில் ‘விக்ரம்’ ரிலீஸ் ஏன்? – கமல்ஹாசன் பதில்

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் விக்ரம் படத்தின் ட்ரைலரும் வெளியானது.

‘விக்ரம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. இதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம், அதை ஒரு அளவுக்கு செய்திருக்கிறோம் எனவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘விக்ரம்’ என்ற தலைப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் தேர்வு செய்தார். தேவைப்பட்டால் சத்யா என்றுகூட வைத்திருப்பார் என தெரிவித்தார். அதேபோல் இந்த படத்தில் இடம்பெறும் பத்தல பத்தல பாடலில் வரும் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்லை இப்பாலே என்ற வரிகளுக்கு சர்ச்சை எழுந்தது குறித்து பேசியபோது, ஒன்றியம் என்பதற்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளன. தயாரிப்பாளர்கள் இணைந்து செயல்படுவது ஒன்றியம். பத்திரிகையாளர் ஒன்றுகூடி இருக்கும் இந்த நிகழ்வும் ஒரு ஒன்றியம், இயக்குனர்கள் இணைந்து சங்கம் வைத்தாள் அது ஒன்றியம் என குறிப்பிட்டார். இந்த சங்கங்களில் தவறு நடந்தால் படமெடுப்பது பாதிக்கும். அது போல்தான் இதையும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதிலளித்தார்.

இதைப்போல மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியிடுவது திட்டமிட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் சினிமாகாரனாக கலைஞரைப் பற்றிப் பேச ஆயிரம் உள்ளது. இது யாதார்த்தமான ஒரு நிகழ்வு என தெரிவித்தார். மேலும் பான் இந்தியா திரைப்படம் என்பது ஒரு வார்த்தை. சத்யஜித்ரே எடுத்ததும் இந்தியா திரைப்படம்தான் என கமலஹாசன் கூறியுள்ளார்.