எம்.ஜி.ஆர் போல படம்போடுவதால் எம்.ஜி.ஆராக முடியாது – விஜய் போஸ்டர் விவகாரத்தில் அமைச்சர் விமர்சனம்

0
298

எம்.ஜி.ஆர் போல படம்போடுவதால் எம்.ஜி.ஆராக முடியாது – விஜய் போஸ்டர் விவகாரத்தில் அமைச்சர் விமர்சனம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துரை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘கொரோனா ஆய்வு பணிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். கொரோனா பரவல் தொடங்கியது முதல் அரசின் நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறாரே தவிர ஆக்கபூர்வமான ஆலோசனை கூறவில்லை.

அவருக்கு யோசனை சொல்லத் தெரியாது. அவர் மீது வஞ்சம் இல்லை. அவருக்கு தெரிந்தால் தானே சொல்ல முடியும். அவருக்கு அனுபவமும் இல்லை. மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலின் ஏதோ சொல்லி வருகிறார். அவர் சொல்வதை போன்ற இறப்பு சதவீதம் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க தான் பெரிய சக்தி என்பது அனைவருக்கும் தெரியும்.

தேர்தல் வரும் நேரத்தில் டெபாசிட் வாங்க முடியாத கட்சிகள் கூட நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம். நாங்கள் தான் முதல்வர் என்று சொல்வார்கள். தொகுதியில் 2,000 வாக்குகள் கூட வாங்க முடியாதவர்கள் கூட நாங்கள் தான் முதல்வர் என்று கூறி தேர்தலை சந்திப்பது வழக்கம்.

எம்.ஜி.ஆர் போல சித்தரித்து படம் போடுவதால் எல்லோரும் எம்.ஜீ.ஆராக முடியாது. எம்.ஜி.ஆர் இன்றைக்கும் மக்கள் உள்ளங்களில் அழிக்க முடியாத சக்தியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

ஆகையால் தான் எம்.ஜி.ஆர் போல மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காக போஸ்டர் அடித்து வருகின்றனர். அதிலும் எம்.ஜி.ஆர் வாழ்ந்து வருகிறார். எம்.ஜி.ஆர் மறைந்து 32 ஆண்டுகளுக்கு பின்னரும், அவர் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ஆட்சியிலும் இருக்கிறது. எம்.ஜி.ஆர் போல மாதிரிகளை உருவாக்கலாம். தவிர யாரும் எம்.ஜி.ஆராக முடியாது.2021 தேர்தல் வருவதற்கு முன்பு ஆயிரம் பேர் நாங்கள் தான் முதல்வர் என்று கூறி வருவார்கள். அது நகைச்சுவையாக தான் இருக்கும். 2021ல் ஆட்சியை பிடிக்கப்போவது அ.தி.மு.க தான்.

அ.தி.மு.க முதல்வர் தான் ஆட்சி செய்ய போகிறார். ஆகையால் தான் இளைஞர்கள், படித்தவர்கள் அ.தி.மு.கவில் இணைந்து வருகின்றனர். காலத்தினால் அழிக்க முடியாத சக்தியாக அதிமுக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.