எனிமி விமர்சனம் : வித்தியாசமான த்ரில்லிங் அனுபவம்

0
196

எனிமி விமர்சனம் : வித்தியாசமான த்ரில்லிங் அனுபவம்

மினி ஸ்டியோஸ் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்த் சங்கர்.

இதில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ், ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-தமன்.எஸ், பின்னணி இசை-சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு-ஆர்.டி.ராஜசேகர், வசனம்-ஷான் கருப்பசாமி, திரைக்கதை-ஆனந்த்சங்கர், ஷான் கருப்பசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், தயாரிப்பு வடிவமைப்பு-டி.ராமலிங்கம், எடிட்டர்-ரெய்மண்ட் டெரிக் க்ரஸ்டா, நடனம்-பிருந்தா, சதீஷ் கிருஷ்ணன், சண்டை-ரவி வர்மா, பாடல்கள்-விவேக், அறிவு, உடை-ப்ரீத்தா அகர்வால், தயாரிப்பு நிர்வாகி-எஸ்.பி;.சொக்கலிங்கம், பிஆர்ஒ-ரியாஸ்.

முன்னால் சிபிஐ ஆபிசர் பிரகாஷ்ராஜ் மகன் ஆர்யா சிறுவயதில் தன் தந்தையின் வழிகாட்டுதலின்படி போலீசில் சேர தீவர பயிற்சி செய்கிறார். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் மளிகை கடைக்காரர் தம்பி ராமையா மகன் சிறு வயது விஷால் கவனிக்க தொடங்க, இதைப் பார்க்கும் பிரகாஷ்ராஜ் இருவருக்கும் பல கடின பயிற்சிகளை செய்ய வைத்து வல்லவன்களாக்குகிறார்.இந்த சமயத்தில் பிரகாஷ்ராஜ் மர்மமாக கொல்லப்பட, தம்பி ராமையா தன் மகன் விஷாலுடன் அந்த ஊரை விட்டே காலி செய்து கொண்டு சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்று அங்கு மளிகைக்கடை நடத்துகிறார்.தமிழ் சமுதாயம் வாழும் இடத்தில் வசிக்கும் விஷால் அவர்களுக்காக பல உதவிகளை செய்து நல்ல பெயர் வாங்குகிறார். இதனிடையே அங்கே 11 பேர் கேஸ் சிலிண்டர் கம்பெனி வெடி விபத்தில் இறந்து விட, அவர்களுக்கு ஆறுதல் சொல்ல இந்திய வெளியுறவு துறை அமைச்சர் மாளவிகா அவினாஷ் சிங்கப்பூர் வருகிறார். அமைச்சரை கொல்ல ஆர்யா சதி திட்டம் தீட்டுவதை அறிந்து அதனை முறியடிக்கும் விஷால் செய்யும் முயற்சியால் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார். இந்த சதித்திட்டம் வெற்றி அடைந்ததா? ஆர்யா விஷாலிடம் சவால் விடுவதன் ரகசியம் என்ன? பழைய நண்பர்கள் எதிரிகளாக உருமாறியதன்  பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

இதில் விஷால், ஆர்யா, இரு துருவங்களாக படத்தில் மோதலிலும், சண்டையிலும் வித்தியாசத்துடன் அதிரடி ஆக்ரோஷ நடிப்பை காட்டியுள்ளனர். இதில் மிருணாளினி ரவியை விட மம்தா மோகன்தாஸின் கதாபாத்திரம் வலுவாக உள்ளது.சில காட்சிகள் வந்தாலும் பிரகாஷ்ராஜ் நடிப்பு மனதில் நிற்கிறது.சென்டிமெண்ட் மற்றும் பாசக்கார அப்பாவாக தம்பி ராமையா, காமெடி என்ற பெயரில் கருணாகரன், அமைச்சராக மாளவிகா அவினாஷ் அனைவரும் சிறப்பு.

விவேக், அறிவு பாடல்களின் தமனின் இசை அசத்தல் என்றால் சாம் சி.எஸ்சின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருந்து அதிர வைத்துவிடுகிறது.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு உள்ளுர் வெளிநாடு காட்சிகளையும், பிரம்மாண்ட அரங்குகள், அதிரடி சண்டைக்காட்சிகள், கண்ணாடி அடுக்குமாடி கட்டிடங்கள், வெளிநாட்டு சிறை கூடங்கள், விசாரணை என்று நிஜத்தை கண் முன் நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

எடிட்டர்-ரெய்மண்ட் டெரிக் க்ரஸ்டா, சண்டை-ரவி வர்மா படத்திற்கு பலம்.
சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் இருவர் புத்திசாலியாக இருந்தாலும் எவ்வாறு தங்கள் சிந்தனையால் நல்லவராகவும், கெட்டவராகவும் மாறி வெவ்வேறு திசையில் பயணித்து பிறகு சந்திக்கும்போது நடக்கும் மோதல் சம்பவங்களையும் அதிரடி காட்சிகளையும் சுவாரஸ்யத்துடன் கதையம்சத்துடன் கொடுத்து கை தட்டல் பெறுகிறார் ஆனந்த் சங்கர்.

மொத்தத்தில் எனிமி வித்தியாசமான த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும்.