ஊமைச்செந்நாய் விமர்சனம்: ஊமைச்செந்நாய் ஆக்ஷன் துரத்தலில் தடங்கல்களை தாண்டி சீறிப்பாய்கிறது

0
413

ஊமைச்செந்நாய் விமர்சனம்: ஊமைச்செந்நாய் ஆக்ஷன் துரத்தலில் தடங்கல்களை தாண்டி சீறிப்பாய்கிறது

லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ் சார்பில் முருகானந்தம் செல்வராஜ் மற்றும் வெங்கட்ராமன்  செல்வராஜ் இணை தயாரிப்பில் ஊமைச்செந்நாய் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அர்ஜுனன் ஏகலைவன்.

இதில் மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, சாய் ராஜ்குமார், ஜெயகுமார், கஜராஜ், அரோல் டி.சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-கல்யாண் வெங்கட்ராமன், எடிட்டர்-அதுல் விஜய், இசை-சிவா, ஸ்டன்ட்-தினேஷ் காசி, கலை-மதன்,  பிஆர்ஒ-ஜான்.

கஜராஜ் நடத்தும் தனியார் துப்பறிவு நிறுவனத்தில் வேலை செய்கிறார் மைக்கேல் தங்கதுரை. இவர் சனம் ஷெட்டியை காதலிக்கிறார். அமைச்சரிடம் உதவியாளராக இருக்கும் ஜெயராஜை உளவு பார்க்குமாறு அனுப்புகிறார் கஜராஜ். தான் சேகரித்த தகவல்களை கஜராஜிடம் கொடுக்கிறார் தங்கதுரை. அதன் பின் தான் கஜராஜ் தன்னிடம் பொய் சொல்லி வேறு ஒரு காரியத்திற்காக உளவு பார்த்ததை தங்கதுரை அறிந்து வேலையிலிருந்து நின்று விடுகிறார். ஜெயராஜிடம் உளவு பார்த்த உண்மையை கூறி எச்சரிக்கையாக இருக்குமாறு தங்கதுரை சொல்கிறார். இதை கேள்விப்பட்டு கோபமடையும் கஜராஜ் போலீஸ் அதிகாரி அரோல் சங்கரிடம் சொல்லி, ரவுடிகளை விட்டு தங்கதுரையின் காதலி சனம் ஷெட்டியை கடத்தி விடுகிறார்.அதன் பின் அமைச்சரின் ஆட்கள் ஜெயக்குமாரின் குடும்பத்தையும் கடத்தி  முக்கியமான ஆவணத்தை கொடுக்கும்படி சொல்கின்றனர். இறுதியில் தங்கதுரை சனம் ஷெட்டியை கண்டுபிடித்தாரா? ஜெயக்குமாரும் அவரது குடும்பமும் என்னானது என்பதே துரத்தும் க்ளைமேக்ஸ்.

படம் முழுவதும் சோகம் தான் முகத்தில் தெரிய நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை, தன்னுடைய கருத்தை சிறப்பாக எடுத்துரைக்கும் சனம் ஷெட்டி, ரவுடி சேதுவாக சாய் ராஜ்குமார், அமைச்சர் பிஏவாக ஜெயகுமார், துப்பறிவு கம்பெனி நடத்தும் கஜராஜ், ஏசிபி அரோல் டி.சங்கர் மற்றும் பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக படத்திற்கு வலிமை சேர்த்து இயல்பாக நடித்துள்ளனர்.

கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு  குறிப்பாக கண்டைனர், சோளக்காடு சண்டை காட்சிகளிலும், துரத்தல் காட்சிகளிலும், உளவு பார்க்கும் காட்சிக் கோணங்களிலும் அபரிதமான உழைப்பு பளிச்சிடுகிறது.

சிவாவின் இசை கேட்கும்படி உள்ளது.

அதுல் விஜய் எடிட்டிங் நன்றாக இருந்தாலும் சில காட்சிகள் எதற்காக வருகிறது என்பதை யூகித்து கொள்ள வேண்டிய சூழ்நிலையே ஏற்படுகிறது.

துப்பறிந்து உளவு பார்க்கும் கதையில், அரசியல், துரோகம், ரவுடி, கடத்தல், பழி வாங்குதல், சண்டை என்று வித்தியாசமாக கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கிறார் அர்ஜுனன் ஏகலைவன். இதில் கதாபாத்திரங்களின் பாத்திரப்படைப்பு முதலில் தெளிவாக காட்டப்படவில்லை, யூகத்தின் அடிப்படையிலேயே கணித்து படத்தை பார்க்க வைத்து விடுகிறார். சில மணி நேரங்கள் சென்ற பிறகு தான் படத்தில் முழு ஈடுபாட்டுடன் திரைக்கதை நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு தான் கதைக்களம் சுறுசுறுப்பாக நகர்ந்து இறுதிக்காட்சியில் பல திருப்பங்களை கொண்ட கொலைக்களமாக க்ளைமாக்சில் கதையை முடித்து கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன்.

மொத்தத்தில் லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ் சார்பில் முருகானந்தம் செல்வராஜ் மற்றும் வெங்கட்ராமன்  செல்வராஜ் இணை தயாரிப்பில் ஊமைச்செந்நாய் ஆக்ஷன் துரத்தலில் தடங்கல்களை தாண்டி சீறிப்பாய்கிறது.