இரவு முழுவதும் கார் ஓட்டிக் கொண்டே கடைசி விவசாயியை விமர்சித்த மிஷ்கின்

0
112

இரவு முழுவதும் கார் ஓட்டிக் கொண்டே கடைசி விவசாயியை விமர்சித்த மிஷ்கின்

மிஷ்கின் மனதில் பட்டதை மறைக்காமல் பேசக்கூடியவர். அதுவே அவரது பலமும் பலவீனமும். கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்த அவர் இரவு முழுவதும் கார் ஓட்டிக்கொண்டே அப்படத்தைப் பற்றி பேசியிருக்கிறார். அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இரவு முழுவதும் கார் ஓட்டுவது என முடிவு செய்து அதனை செயல்படுத்தியும் இருக்கிறார். இயக்குனர் மணிகண்டனுக்கு சக படைப்பாளியின் மிகப்பெரிய அங்கீகாரம் இது. பல்வேறு விஷயங்களை இந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். அதில் முக்கியமான சிலவற்றை பார்க்கலாம்.

1. இந்தப் படத்தை இண்டர்வெல் வரை பார்த்து விழுந்து விழுந்து அழுது கொண்டிருந்தேன். கண்ணீர் துளிகளுடன் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

2. இந்த இரவு முழுவதும் நான் கார் ஓட்டிக் கொண்டே இருக்கப் போகிறேன். இந்த இரவை என் வாழ்நாளை சொல்லித்தந்த திரைப்படமாக பார்க்கிறேன்.

3. என்னுடைய மகளிடம் இந்தப் படத்தை பார்க்க சொல்வேன். இந்தப் படம் நம்ம வாழ்க்கையே ஸ்லோவாக வாழவேண்டும் என்று சொல்கிற திரைப்படம். நாம ரொம்ப வேகமா போய்க்கொண்டே இருக்கிறோம்.

4. என் மகள் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் அங்கேயே இருப்பாளா திரும்பி வருவாளா தெரியாது. இந்தப் படம் பார்த்த பிறகு அவளுடைய முடிவை ரீகன்சிடர் பண்ண சொல்வேன். நீ எங்க வாழனும் எப்படி வாழவேண்டும் என்பதை நீ முடிவு செய்யணும் என்று கேட்பேன்.

5. இது ரொம்ப எளிமையான படம். ரொம்ப வலிமையான படம்.

6. தைரியமா படத்தை எடுத்திருக்கிறார் என்பார்கள். ஆனால் அந்த மனிதன் ரொம்ப அமைதியாக, இப்படித்தான் ஒரு படம் எடுக்கணும், நல்ல படமா இருக்கணும், அது சமூகத்திற்கு தேவைப்படணும், முக்கியமா ஆன்மாவை சுத்தப்படுத்தணும்னு மணிகண்டன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

7. கடந்த நூறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகச் சிறந்த படம் என்று இதைச் சொல்வேன்.

8. எனக்குப் புடிச்ச நிறைய படங்கள் இருக்கு. பராசக்தி பிடிக்கும், சிறை பிடிக்கும், தங்கப் பதக்கம் பிடிக்கும், கைதி கண்ணாயிரம், சேது இந்த படங்கள் எல்லாம் பிடிக்கும். ஸ்ரீதரோட எல்லா படங்களும் பிடிக்கும். உதிரிப்பூக்கள் பிடிக்கும், பாலுமகேந்திரா படங்கள் பிடிக்கும், பாலச்சந்தரின் எல்லா படங்களும் பிடிக்கும், என் நண்பன் வெற்றிமாறனின் படங்கள் பிடிக்கும், நண்பர் ராமின் படங்கள் பிடிக்கும். நானும் 9 படங்கள் இயக்கியிருக்கிறேன். ஆனால் நான் சொல்ற எங்க எல்லாரையும் விட மிகச்சிறந்த படம் இது என்று சொல்வேன்.

இது அந்த வீடியோவில் முதல் ஐந்து நிமிடங்களில் வரக்கூடியவை. மீதி பகுதிகளில் படத்தை கொண்டாடித் தீர்த்திருக்கிறார் மிஷ்கின். மணிகண்டனுக்கு விழா எடுப்பேன் என்றும் கூறியுள்ளார். கடைசி விவசாயியை முன்வைத்து தன்னையும், தன் படங்களையுமே விமர்சித்துள்ளார். ஒரு இயக்குனருக்கு இன்னொரு இயக்குனர் அளித்திருக்கும் அதிகபட்ச மரியாதை.