ஆன்லைன் நடிப்பு பயிற்சி மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி திரட்டும் இயக்குநர் சுசீந்திரன்

0
346

ஆன்லைன் நடிப்பு பயிற்சி மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி திரட்டும் இயக்குநர் சுசீந்திரன்

ஆன்லைனில் இயக்கம் – நடிப்பு பயிற்சி அளித்து அதன் மூலம் வரும் முழு தொகையை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார், இயக்குநர் சுசீந்திரன்.

கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்ததால் பொதுமக்களும் அனைத்து துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், இயக்குநர் முருகதாஸ்,லிங்குசாமி, ஷங்கர், அஜித்,விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என பலர் நிதியுதவி அளித்திருந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் ஆன்லைனில் நடிப்பு மற்றும் இயக்கம் பயிற்சி கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் முழு வருவாயையும் தமிழக அரசின் கொரோனா முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து, அவர் பேசும்போது,

“வெண்ணிலா ஃபியூச்சர் சினிமா மூலம் இயக்கம் – நடிப்பு பயிற்சி பற்றி ஆன்லைன் வகுப்பு எடுக்கவிருக்கிறேன். நடிகர்கள் எப்படி நடிக்கணும் என்பதை அடிப்படையிலிருந்து சொல்லிக்கொடுக்கப்போகிறேன். ஆர்வமாக இருப்பவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். என்னுடைய 22 வருட சினிமா அனுபவங்களையும் கற்றுக்கொண்டவற்றையும் பகிரவிருக்கிறேன்.

இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வபர்களின் கட்டணத்தை முழுமையாக முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கவிருக்கிறேன்” என்று கூறியுள்ளார். வரும் 14 ஆம் தேதிமுதல் 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த வகுப்பிற்கு கட்டணம் ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறார்.