‘அந்நியன் கதை எனக்கே சொந்தம்’! – ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு இயக்குநர்ஷங்கர் பதிலடி!!

0
155

‘அந்நியன் கதை எனக்கே சொந்தம்’! – ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு இயக்குநர்ஷங்கர் பதிலடி!!

அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதையடுத்து, ஷங்கர் தன்னிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்வதாக அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.

படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும், அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.