அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இணையும் மலையாள சினிமா நடிகர்கள்!

0
159

அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இணையும் மலையாள சினிமா நடிகர்கள்!

மலையாள சினிமா நடிகர்கள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இது, கேரளாவில் புதிய ட்ரெண்டை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பது தமிழகம் ஒரு நல்ல சான்று. சினிமாவில் கோலோச்சிய நடிகர்கள் முதல்வர்களாக, எம்.பி, எம்.எல்.ஏ என மக்கள் பிரநிதிகளாக வலம்வந்துள்ளனர், வந்துகொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இது சாதாரண விஷயம். ஆனால், கேரள மாநிலத்தில் நடிகர்களின் ‘அரசியல் பிரவேசம்’ மக்கள் மத்தியில் செல்லுபடியாகாது என்று பேச்சை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும், அனைத்தும் உண்மை கிடையாது. சில நடிகர்கள் கேரள அரசியலிலும் கால்பதித்து வருகின்றனர். இதில் சிலருக்கு வெற்றி கிடைத்தாலும் சிலருக்கு தோல்வி கிடைத்து வருகிறது.

சமீபகாலமாக அரசியலில் இறங்கும் கேரள நடிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சுரேஷ் கோபி, நடிகர்கள் முகேஷ், நடிகர் இனனொசென்ட் போன்றோர் அரசியலில் கோலோச்சி வருகின்றனர். இவர்களில் சுரேஷ் கோபி மட்டும் பாஜகவில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். மற்ற இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ மற்றும் எம்பியாக பணியாற்றி வருகின்றனர். ஆம், மலையாள நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வார்கள் என்பதுதான் எழுதப்படாத விதி. பெரும்பாலான மலையாள நடிகர்களை இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

காங்கிரஸ் கட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நடிகர்கள் பங்களித்து வருகின்றனர். கேரளத்தின் மார்க்கண்டேயன் என்று புகழப்படும், 725 படங்களில் நடித்திருந்த பிரேம் நசீர், காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார். அதற்குப் பிறகு நடிகர் சலீம்குமார் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். ஆனால், இந்தப் போக்கு தற்போது மாறி வருகிறது. சமீபத்தில் நடந்த சில சம்பவங்களே இதற்கு உதாரணமாக அமைகிறது.

கடந்த வாரம் மலையாள சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மேஜர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா நடத்திவரும் ஐஸ்வர்யா யாத்திரையில் பங்கேற்று தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். மோகன் லாலை வைத்து பல படங்களை இயக்கி, அவருக்கு ராணுவத்தின் சிறப்பு பட்டம் பெற்றுத்தந்த இந்த மேஜர் ரவி இதற்கு முன் பாஜக ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டவர். இப்படிப்பட்டவர் காங்கிரஸில் இணைந்ததும், ’90 சதவீத பாஜக தலைவர்களை நம்புவதற்கு தகுதியற்றவர்கள் அல்ல’ என்றும், இனி ஒருபோதும் பாஜக தலைவர்கள் சார்பாக பேசமாட்டேன் என்றும் அதிரடியாக பேட்டி கொடுத்தார்.

இந்த சம்பவத்துக்கு மத்தியில் நேற்று அதே ரமேஷ் சென்னிதாலா நடத்திவரும் ஐஸ்வர்யா யாத்திரையில் மற்ற இரண்டு நடிகர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர். ஒருவர் இயக்குநர் & நடிகர் ரமேஷ் பிஷாரிடி. மற்றொருவர் கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எடவேலா பாபு. இவர்கள் கட்சியில் இணைத்துக்கொண்ட உடன், “இந்தியாவின் வாழ்வாதாரத்திற்கு காங்கிரஸின் வெற்றி அவசியம்” என்று கூட்டாக பேசினர்.

இவர்கள் மட்டுமல்ல, மற்றொரு காமெடி நடிகரான தர்மஜன் போல்காட்டி என்பவரும் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இப்படி வரிசையாக நடிகர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கிப் படையெடுத்திருப்பது கேரள காங்கிரஸ் கட்சிக்கு புதிய தெம்பை புகுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.