ஹாட்ரிக் சாதனை: அஜித் – வினோத் கூட்டணி!

0
164

ஹாட்ரிக் சாதனை: அஜித் – வினோத் கூட்டணி!

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான களத்தில் வெற்றிப் படங்களை தந்தவர் ஹெச்.வினோத். இவர் தனது மூன்றாவது படத்துக்காக மீண்டும் அஜித்தை அணுகினார். படத்தின் கதையை கேட்டவர் உடனே நடிக்க சம்மதித்தார். அந்த நேரம் போனி கபூருக்கு ஒரு படம் நடித்துத் தர வேண்டிய கடமை அஜித்துக்கு இருந்தது. இந்தியில் வெளியான பிங்க் படத்தை தமிழில், அஜித் நடிப்பில் ரீமேக் செய்வது என்று முடிவானது. இதனால், ஹெச்.வினோத்தின் படம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டது.

அந்த நேரம், அஜித் எடுத்த முடிவின்படி, பிங்க் இந்தி ரீமேக்கை ஹெச்.வினோத்தே இயக்குவது என்று தீர்மானமானது. அதன் பிறகு அவர் தன்னிடம் சொன்ன கதையை படமாக்கலாம், என அஜித் உறுதி அளிக்க, நேர்கொண்ட பார்வை உருவானது. அப்படம் முடிந்த நிலையில் தற்போது, அஜித்திடம் தான் முதலில் கூறிய கதையை வலிமை என்ற பெயரில் வினோத் எடுத்து வருகிறார். படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

சமீபத்திய தகவல் என்னவென்றால், வலிமை படப்பிடிப்பில் வினோத் சொன்ன ஒன்லைன் அஜித்துக்குப் பிடித்துப் போக, இதையே அடுத்தப் படமாக பண்ணலாம் என்று உறுதி அளித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது மூன்றாவது முறையாக அஜித் – வினோத் கூட்டணி இணையப் போகிறது. இப்படி ஒரே இயக்குநருடன் தொடர்ச்சியாக பணிபுரிவது அஜித்துக்கு புதிதல்ல.

2014-ல் சிறுத்தை சிவா அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். அதையடுத்து கௌதம் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் நடித்தார். 2015-ல் வேதாளம் படத்துக்காக சிவாவும், அஜித்தும் மீண்டும் இணைந்தனர். அதன் பிறகு விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார் சிவா. அந்த ஹாட்ரிக் சாதனையை வினோத்தும் நிகழ்த்த இருப்பதாக கூறப்படுகிறது.