வீர மங்கை வேலுநாச்சியார்- ‘சிவகங்கை ராணி’ – தைத்திருநாளில் படப்பிடிப்பு தொடக்கம்

0
1303

வீர மங்கை வேலுநாச்சியார்- ‘சிவகங்கை ராணி‘ – தைத்திருநாளில் படப்பிடிப்பு தொடக்கம்

18 கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேந்திரன் மணிமாறன் இயக்கத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி கொண்டு தன் ராஜ்ஜியத்தை மீட்ட வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் வரலாறு திரைப்படமாகிறது.
’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தைத் திருநாளில் தொடங்குகிறது.
இது குறித்து படக்குழு தரப்பில், “சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-வது நினைவுநாள் டிச.25 அன்று கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி, ’வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ திரைப்படத்திற்கான அலுவலகத்துக்கு பூஜை போடப்பட்டது.

வீரமங்கை வேலுநாச்சியாரின் கதையை திரைப்படமாக எடுக்க சட்டரீதியாக தக்க உரிமை பெறப்பட்டுள்ளது. இப்படத்தில் வேலுநாச்சியாராக பல சரித்திரப் படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் பலவற்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி திரையனுபவம் கொண்ட ராஜேந்திரன் மணிமாறன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ’சூரியவம்சம்’ ரீமேக்கில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு, தனது கேமராவால் ஜாலங்கள் செய்யும் தொழில்நுட்ப வித்தகர், ஒப்பற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஜீவபாரதி வசனம் எழுதவிருக்கிறார். அசோக் மேத்தா எடிட்டிங், டி.பாண்டியன் தயாரிப்பு மேற்பார்வை செய்யவிருக்கின்றனர். பிஆர்ஓ-வாக நிகில் முருகன் செயல்படுகிறார். இவர்களுடன், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இணையவிருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:

Veera Mangai VeluNachiyar – The Queen of Sivagangai- Shooting begins on Pongal