விநோதய சித்தம் விமர்சனம்

0
238

விநோதய சித்தம் விமர்சனம்

அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன் மற்றும் நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில்  ஜீ 5 ஒரிஜினல் படமான விநோதய சித்தம் ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, சிவரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், தீபக், இயக்குனர் பாலாஜி மோகன், ஹரிகிருஷ்ணன், அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்- ஏகாம்பரம், இசை-சி.சத்யா,  ரமேஷ் படத்தொகுப்பு, வசனம் –  ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி, மக்கள் தொடர்பு – ரியாஸ்.

தான் சேர்ந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து முன்னேற்றத்தில் பங்கு வதித்து பெரிய நிறுவனமாக உயரச்செய்து மேல் அதிகாரியாக கார், பங்களா என்று அனைத்து வசதியான சலுகைகளையும் பெற்று  மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று சந்தோஷமாக வாழ்கிறார் தம்பி ராமையா. தன் 25வது மணநாளை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அவசர வேலையாக வெளியூருக்கு செல்லும் தம்பி ராமையாவிற்கு விமான டிக்கெட் கிடைக்காததால் வேலை முடித்து விட்டு காரில் திரும்பி வருகிறார். வரும் வழியில் விபத்தில் சிக்கி தம்பி ராமையாவின் உயிர் பிரிகிறது. அந்த சமயத்தில் காலம் என்கிற எமனாக வரும் சமுத்திரகனியிடம் கெஞ்சி 90 நாட்கள் உயிரோடு இருக்க வரம் பெற்று மீண்டும் அவருடன் சென்னைக்கு பயணிக்கிறார். தான் இல்லை என்றால் எதுவும் வீட்டில் இயங்காது என்று மமதையுடன் இருக்கும் தம்பிராமையாவிற்கு காலம் வேறு திசையில் பயணிக்க வைக்கிறது. ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ஆசைப்பட, அது நிறைவேறாமல் போகிறது. மகள் காதல் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறுகிறார், வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் வேலை இழந்து தனது காதலியுடன் வீட்டிற்கு வருகிறார். மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட, வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இதனால் அதிர்ச்சியடையும் தம்பி ராமையா அனைத்து பிரச்னைகளையும் 90 நாட்களில் சரி செய்தாரா? இறுதியில் நடந்தது என்ன? என்பதே மீதிக்கதை.

சமுத்திரகனி காலம் என்ற நேரத்தை குறிக்கும் மனிதராக, தம்பி ராமையாவிற்கு எமனாக காத்திருப்பதும், அடக்கமான  ஆனால் அளவான பேச்சு, தீர்க்கமான பார்வை, நறுக்கென்ற வசனம், அமைதியான, இறுக்கமான நடிப்பு என்று அளந்து நடித்து பொளந்து கட்டியுள்ளார்.

தம்பி ராமையா படத்திற்கு முக்கிய முதுகெலும்பு, படம் முழுவதும் அவர் பண்ணும் அளப்பறைகள், அதட்டி உருட்டும் நக்கல் பேச்சு, சில இடங்களில் மிகையான நடிப்பு தெரிந்தாலும், வலுவான பாத்திரப்படைப்பு கை கொடுத்து  விட தன் அசாத்திய நடிப்பு மற்றும் ஆற்றலால் அசத்திவிடுகிறார்.

இவர்களுடன் சிவரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், தீபக், இயக்குனர் பாலாஜி மோகன், ஹரிகிருஷ்ணன், அசோக் படத்தின் காட்சிகளுக்கு உயிர் நாடியாக விளங்குகின்றனர்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, சி. சத்யாவின் வித்தியாசமான இசையும் படத்தை வேறு தளத்திற்கு கூட்டிச்செல்கிறது.

ரமேஷ் படத்தொகுப்பு,  ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி ஆகியோரின் வசனம் நறுக்கென்று சூப்பராக உள்ளது.

நேரமில்லை என்று சொல்பவருக்கு, நேரம் எவ்வளவு பொன்னானது, யார் இருந்தாலும், இல்லையென்றாலும் உலகம் இயங்கிக்கொண்டே தான் இருக்கும், அவரை சார்ந்தவர்கள் வாழ்க்கை தடைபடாமல் ஒடிக்கொண்டே தான் இருக்கும் என்பதை தம்பி ராமையாவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து புதிய முயற்சியோடு, புதிய சிந்தனையோடு நகைச்சுவை கலந்து அசாத்திய திறமையோடு கனகச்சிதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சமுத்திரகனி, வெல்டன்.

மொத்தத்தில் விநோதய சித்தம் வினோதமான சிந்தனையில் உதிர்த்த நடைமுறை வாழ்க்கையை புரிந்து கொள்ள பயணிக்கும் கால சக்கரம்.