“விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்” – வைரமுத்து புகழஞ்சலி
அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்,
”வருந்துகிறேன் நண்பா!
திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய் இனி நீ.”
இவ்வாறு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.