விடுதலை பாகம் 2 சினிமா விமர்சனம் : விடுதலை பாகம் 2 உரிமை குரல் கொடுக்கும் உழைக்கும் மக்களின் தொடரும் எழுச்சிமிகு போராட்டம் | ரேட்டிங்: 3/5

0
705

விடுதலை பாகம் 2 சினிமா விமர்சனம் : விடுதலை பாகம் 2 உரிமை குரல் கொடுக்கும் உழைக்கும் மக்களின் தொடரும் எழுச்சிமிகு போராட்டம் | ரேட்டிங்: 3/5

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் விடுதலை பாகம் 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன்

இதில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷே​hர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், சேதன், இளவரசு, தமிழ், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் : இசை : இளையராஜா, ஒளிப்பதிவு இயக்குனர் : ஆர் வேல்ராஜ், கலை இயக்குனர் : ஜாக்கி, படத்தொகுப்பு : ராமர்,ஆடை வடிவமைப்பாளர் : உதாரா மேனன், சண்டைக்காட்சிகள் : பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா, பிரபு, ஒலி வடிவமைப்பு : டி உதயகுமார், ஒலி விளைவுகள் : பிரதாப், விஎஃப்எக்ஸ் : ஆர் ஹரிஹரசுதன், நிர்வாக தயாரிப்பாளர் : ஜி மகேஷ், இணை தயாரிப்பாளர் : வி மணிகண்டன், மக்கள் தொடர்பு : டி.ஒன், சுரேஷ்சந்திரா, அப்துல் நாசர்.

வெற்றி மாறனின் விடுதலைப் பகுதி 1 முடிவடைந்த இடத்திலிருந்து விடுதலைப் பகுதி 2 தொடர்கிறது. விஜய் சேதுபதி ஒரு சக்தி வாய்ந்த வாத்தியார் பெருமாள் உருவமாக காட்டப்பட விடுதலைப் பகுதி 2 -ல் புரட்சித் தலைவர் பெருமாள் உருவாக கடந்த வந்த பாதைகளின் சாரம்சமாக தொகுத்து அதை சூரி தன் தாய்க்கு கடிதம் வாயிலாக நடந்த சம்பவங்களை விவரித்து எழுதும் குரல் வடிவமாக பின்னணியில் வழங்கியுள்ளார். காவலர் குமரேசன் (சூரி) உதவியுடன் புரட்சித் தலைவரான பெருமாள் (விஜய் சேதுபதி) காவல்துறையினரால் ரகசியமாக கைது செய்யப்பட தலைமைச் செயலாளர் சுப்பிரமணியன் (ராஜீவ் மேனன்) அவரது ஆதரவாளர்களின் ஆலோசனைப்படி பெருமாளை அடர்ந்த காடு வழியாக கேம்ப்புக்கு சேத்தன் தலைமையில் அழைத்து வர ஏற்பாடு செய்கின்றனர்.  காட்டு பாதையில் சேத்தன் தலைமையில் பெருமாள் கைவிலங்கிடப்பட்டு ஜீப்பில் பயணிக்க ரகசியமாக நடைபெறும் இந்த நடவடிக்கை பெருமாளின் ஆதரவாளர்களுக்கு தெரிந்து விடுகிறது. இதனிடையே இவர்கள் பயணம் செய்யும் போது பெருமாள் தன்னுடைய சாதாரண வாழ்;க்கை எப்படி புரட்சியாளனாக மாற்றியது என்பதையும், தன்னுடைய காதலையையும் போலீஸ் குழுவிடம் விவரிக்க தொடங்குகிறார். வாத்தியாராக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு பணக்கார நில உரிமையாளரின் கொடுமையால் அதிர்ச்சியடைந்த பெருமாள் இடதுசாரி அரசியல் கட்சியில் சேர்ந்து தொழிற்சங்கத்தில் இணைக்கப்படுகிறார். அங்கு அவர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடும் நேரத்தில் தொழிற்சாலை முதலாளியின் மகள் மகாலட்சுமியை (மஞ்சு வாரியர்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். பெருமாள் தனது வழிகாட்டியான ஆசானான இடது சாரி கட்சி தலைவர் கேகே (கிஷோர்) இடமிருந்து விலகி பல இன்னல்களை சந்திக்கும் மக்களுக்காக ஆயுதமேந்திய கிளர்ச்சியை மேற்கொள்ள முற்படுகிறார். இதனால் தனித்து விடப்பட்ட கேகே நிலை என்னானது? ஆயுதமேந்திய கிளர்ச்சி பெருமாளுக்கு வெற்றி தந்ததா? இதனால் பாதிக்கப்பட்டது யார்? பிடிபட்ட பெருமாளை புரட்சியாளர்கள் போலீசாரிடமிருந்து மீட்டனரா? இறுதியில் பெருமாளின் நிலை என்ன? இதனால் குமரேசன் எடுத்த அதிரடி முடிவு என்ன? என்பதே படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.

விஜய் சேதுபதி வாத்தியாராக, பெருமாளாக, கருப்பனாக, தோழராக, இடது சாரி இயக்கவாதியாக, தொழிலாளர்களின் நண்பனாக, ஆயத போராளியாக, அடிமைப்பட்டு அவமதிக்கப்படும் மக்களின் குரலாக ஒங்கி ஒலித்து தன் ஆக்ரோஷமான ஆதிக்கத்தால் நிலைநிறுத்தி, போலீசாரின் தாக்குதலுக்கும், அவமதிப்பிற்கும் அடிபணியாமல் நிமிர்ந்து பதில் சொல்லும் செயலும், தன் கதையை கேட்கும் காவலர்களின் மனதை மாற்றும் அளவிற்கு தன்னுடைய போராட்டத்தின் வலிகளை உணரச்செய்வதும், தன் இயக்கவாதிகளின் துன்பத்தை கண்டு வேதனைப்படும் இடங்களிலும், காதல் கணவனாகவும் சிறப்பான யதார்த்தமான மனிதனின் குணாதிசயங்களை படம் முழுவதும் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.

மஞ்சு வாரியர் பணக்கார வீட்டின் மகளாக இருந்தாலும், தொழிலாளர்களுக்காக தோள் கொடுக்கும் தோழியாக, வீட்டில் அவமதிப்பு நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், தன் கொள்கையை விட்டுக் கொடுக்காத தைரியமான பெண்ணாக, தன் தலைமுடி வெட்டப்பட்டதின் காரணத்தை ஆழத்துடன் விவரிப்பதும் அமைதியாக கணவனின் நிலைப்பாட்டை அங்கீகரித்து ஆர்ப்பாட்டமில்லாமல் செய்துள்ளார்.

சூரி முதல் பாகத்தில் முருகேசனாக இவரைச் சுற்றியே கதைக்களம் நகரும், ஆனால் இரண்டாம் பாகத்தில் இவரின் விவரிப்பில் கதைக்களம் சொல்லப்படுவதுபோலும், க்ளைமேக்ஸ் காட்சியில் காவல் உயர் அதிகாரியையே அலறவிட்டு செல்லும் போதும் முக்கிய காட்சிகளில் மட்டும் இவரின் பங்களிப்பு சிறப்பு.

இடது சாரி தலைவர் கேகேவாக கிஷோர் பெருமாளின் குருவாக இருந்து வழிநடத்தும் நல்ல மனிதராக வாழ்ந்துள்ளார். காதலியை பாலியல் வன்கொடுமை செய்யும்,அடிமையாக நினைத்து அவமதிக்கும் ஜமீன்தாரை எதிர்த்து சேரும் சகதியிலும் சண்டை போட்டு உயிர் விடும் வீரமிக்க இளைஞன் கருப்பனாக கென் கருணாஸ் இவர் தான் பெருமாளின் மனமாற்றத்தின் அச்சாரமாக திகழ்ந்து தன் இருப்பை நிலை நிறுத்தும் வலுவான கதாபாத்திரம்.

ராஜீவ் மேனன் ஒவ்வொரு முடிவாக எடுத்து அரசியலிலும், காவல் துறையிலும் சாதுர்யமாக காய் நகர்த்தும் அரசாங்க ராஜ தந்திரியாக அதிகார திமிரில் அமைதி காத்து ஆர்ப்பரிக்கிறார்.

இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், சேதன், இளவரசு, தமிழ், சரவண சுப்பையா ஆகியோர் பக்கமேளங்கள்.

களப்போராளிகளின் போராட்டங்களின் நடுவே ‘தெனம் தெனமும் உன் நெனப்பு’, ‘மனசுல மனசுல’ நெஞ்சை வருடும் இதமான இரண்டு பாடல்களும், மனதை உலுக்கும் சம்பவங்களுக்கு பின்னணி இசையையும் இரண்டு விதமாக கொடுத்து இசைஞானி இளையராஜா அசத்தியுள்ளார்.

மலைக்காட்டின் எழில்மிகு அபாயமான நெடும்பயணம், ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள், காவல்துறையின் அட்டூழியங்கள், உயர் அதிகாரிகள் கலந்தாலோசிக்கும் பங்களா, பெருமாளின் வாழ்வியலையும், போராட்டத்தையும், காதலையும், இரவுக்காட்சிகள், சண்டைக்காட்சிகள், துப்பாக்கி சூடு, போராளிகளின் மீட்பு போராட்டங்கள் என்று தன் காட்சிக்கோணங்களால் ஒருசேர அதிரச செய்து உழைப்பை தந்துள்ளார் ஒளிப்பதிவு ஆர் வேல்ராஜ்.

படத்தின் தத்ரூபமான காட்சிகளுக்கு கலை இயக்குனர் ஜாக்கி உத்தரவாதம்.

பல கோணங்களில் பயணிக்கும் கதைக்களத்தை இறுக்கி பிடித்து பரபரப்பாக திறம்பட கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ராமர்.

ஆடை வடிவமைப்பாளர் : உதாரா மேனன், சண்டைக்காட்சிகள் : பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா, பிரபு படத்திற்கு கூடுதல் பலம்.

விடுதலை இரண்டாம் பாகத்தில், பெருமாளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அதனால் ஏற்பட்ட மனமாற்றங்கள், காதல், பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமையாக ஒடுக்கி வைத்து, பெண்களை உரிமையோடு தங்களது ஆசைகளுக்கு பலி கொடுக்கும் அதிகார வக்கிரத்தை தோலுரித்து காட்டி, எதிர்க்கும் அப்பாவி மக்களை அடித்து கொடுமைபடுத்தி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்வதும், காவல் துறையால் பெருமாள் கைது செய்ததை மறைமுகமாக்க நினைத்து மேலும் சிக்கலில் சிக்கிக்கொள்ளும் அரசு உயர் அதிகாரிகளின் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம், அரசியல் அடக்குமறை, கிளர்ச்சியூட்டும் அர்த்தமுள்ள வசனங்கள், காவல்துறையால் பெருமாளை பத்திரமாக அழைத்து செல்ல முடிந்ததா? இல்லையா என்பதை பலதரப்பட்ட சம்பவங்களை பதிவு செய்து அழியாத பொக்கிஷமாக க்ளைமேக்ஸ் முப்பது நிமிட காட்சிகள் பிரம்மிப்புடன் கொடுத்து அசர வைத்துள்ளார் இயக்குனர் வெற்றி மாறன்;. பெருமாளின் இறப்பு, முருகேசனின் அடுத்த புரட்சிகரமான ஆட்டத்தை பாகம் 3க்கான லீடுடன் முடித்துள்ளார்.

மொத்தத்தில் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் விடுதலை பாகம் 2 உரிமை குரல் கொடுக்கும் உழைக்கும் மக்களின் தொடரும் எழுச்சிமிகு போராட்டம்.