லைக்கா புரொடக்ஷன்ஸுடன் இணையும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்
தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன்- பிரம்மாண்டமான பொருட்செலவில் தரமான படைப்புகளை உருவாக்கி, திரை ஆர்வலர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறார். இதன் காரணமாகவே இவருடைய தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்- இந்திய திரையுலகில் பிரபலமான முன்னணி வணிக முத்திரையுடன் வலம் வருகிறது. நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படைப்புகளை உருவாக்குவதுடன் மட்டுமல்லாமல், புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதிலும் இந்நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், மலையாளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று கோடி கணக்கில் வசூலித்த ‘2018’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தை தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
‘2018’ எனும் படத்தின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நிகழ்ந்த பேரிடரை யாராலும் மறக்க இயலாது. அந்த நெருக்கடியான தருணங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் துணையாகவும், ஆதரவாகவும் நின்று அரசுக்கு உதவி புரிந்தார்கள். படைப்பாளியான ஜூட் ஆண்டனி ஜோசப்… அந்த தருணங்கள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக சேகரித்து, துல்லியமான விவரங்களுடன் அனைவரையும் ஈர்க்கும் படைப்பாக ‘2018’ஐ உருவாக்கினார். மனித நேயமே சிறந்தது என யதார்த்தமான வாழ்வியலுடன் உணர்த்திய ‘2018’ எனும் படைப்பை உருவாக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்பின் படைப்பு நோக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லைக்கா நிறுவனம் அவருடன் இணைந்திருக்கிறது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி, பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையிலான படைப்பை தர தயாராகி இருக்கிறார்கள். இப்படத்தை ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமையில், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார். மேலும் இந்த பெயரிடப்படாத புதிய படம் குறித்த முழு விவரங்களையும் லைக்கா புரொடக்ஷன்ஸ் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருக்கிறது.