ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் விஷால் 31 படப்பிடிப்பு தொடக்கம்!

0
322

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் விஷால் 31 படப்பிடிப்பு தொடக்கம்!

விஷாலின் 31-வது படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில், சகஜ நிலை சில மாவட்டங்களில் மெல்ல திரும்புகிறது. தடைப்பட்ட படப்பிடிப்புகளை தொடர திரையுலகினர் ஆயத்தமாகிறார்கள். இதில் விஷாலும், அவரது படக்குழுவினரும் முந்திக் கொண்டனர். தனது புதிய படத்தின் படப்பிடிப்பை நேற்று விஷால் தொடங்கினார்.

விஷால் – ஆர்யா நடித்துள்ள எனிமி திரைப்படம் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார். விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, டிம்பிள் ஹயாத்தி நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை நேற்று ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கினர். முதலில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. ரவி வர்மா இந்தச் சண்டைக் காட்சியை அமைத்தார். ஆக்ஷன் படமான இதனை ஒரே வீச்சில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தி ஜுலை இறுதியில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டிருப்பதாக விஷால் கூறியுள்ளார். பேரிடர் கால கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடைப்பிடித்து படப்பிடிப்பை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். பாலசுப்பிரமணியம் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு, ‘நாட் ஏ காமன் மேன்’ (Not A Common Man) என டேக் லைன் வைத்துள்ளனர்.