ராக்கி திரை விமர்சனம்: ராக்கி ரத்தத்தால் எழுதிய கல்லுக்குள் ஈரம்
ரா ஸ்டூடியோஸ் சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிப்பில் ராக்கி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.
இதில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனாரவி, ரோகிணி, அனிஷா, ரவி வெங்கட்ராமன், அஷ்ரப்மல்லிசேரி, பூராமு, ரிஷிகாந்த், ஜெயக்குமார், கானா தரணி, ஜிமிக்கிலி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ஷ்ரேயாஸ் கிருஷ்ணன், படத்தொகுப்பு-ராகூரன், கலை-ராமு தங்கராஜ், இசை-தர்புகா சிவா, ஒலிவடிவமைக்பு ஹரிஹரன், சச்சின், பாடல் வரிகள்-கபர் வாசுகி, மதன் கார்க்கி, வைரமுத்து, மக்கள் தொடர்பு-நிகில் முருகன்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் மல்லியின்(ரோகிணி) கணவர் தாதா மணிமாறனிடம் அடியாளாக வேலை செய்கிறார். அவருக்கு மகன் ராக்கி (வசந்த் ரவி) மற்றும் மகள் அமுதா (ரவீனா ரவி) என இருவர் இருக்க, சிறிது காலம் கழித்து மல்லியின் கணவர் இறந்து விடுகிறார். அவரின் மகன் ராக்கி (வசந்த் ரவி) மணிமாறனிடமே வேலைக்கு சேர்ந்து அடிதடி, கொலைகளை சர்வசாதாரணமாக செய்கிறார். இதனிடையே ஈகிள் எனும் பல தோட்டாக்களை ஒரே நேரத்தில் பாயும் வல்லமை பெற்ற தானியங்கி சுழல் துப்பாக்கியை இலங்கையில் போர் நடப்பதால் இலவசமாக கொடுத்து விடலாம் என்று ராக்கி சொல்ல, அதற்கு மணிமாறன் சம்மதித்தாலும், அவருடைய மகன் ராக்கியிடம் எதிர்த்து சண்டை போடுகிறார். இவர்களின் ஈகோ பிரச்னை பெரிதாகி ராக்கியின் அம்மா மல்லியை கத்தியால் குத்தி கொலை செய்து விடுகிறார் மணிமாறனின் மகன். இதனால் கோபமடையும் ராக்கி மணிமாறனின் மகனை கொலை செய்து விட்டு சிறைக்கு செல்கிறார். பதினேழு வருடங்கள் சிறை வாசத்திற்கு பின் வெளியே வரும் ராக்கி தன் தங்கையை தேடி அலைகிறார். பின்னர் தங்கை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து செல்ல, ராக்கியை போட்டுத் தள்ள காத்திருக்கும் மணிமாறன் அங்கே ஆட்களை அனுப்பி ராக்கியின் தங்கையை கொலை செய்து விடுகிறார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கே செல்லும் ராக்கி, மணிமாறனை தேடி அவர் இடத்திற்கே செல்கிறார். அங்கே தங்கையி;ன் குழந்தை மல்லி (அனிஷா) பணயமாக வைத்து தப்பித்து விடுகிறார் மணிமாறன். தங்கையின் குழந்தையை மீட்கும் ராக்கி புதிய வாழ்க்கை வாழ இலங்கைக்கு செல்ல தயாராகிறார். பழி வாங்க துடிக்கும் மணிமாறன் ராக்கியையும், தங்கை குழந்தையும் கொல்ல பின் தொடர்ந்து செல்கிறார். இறுதியில் ராக்கி மணிமாறனை கொன்றாரா? அத்தனை ரவுடிகளையும் ராக்கி எப்படி சமாளித்தார்? என்பதே அதிர வைக்கும் க்ளைமேக்ஸ்.
ராக்கியாக வசந்த் ரவி படம் முழுவதும் யாரெல்லாம் பழி வாங்க துடிக்கிறாரோ அவர்களை எல்லாம் ரத்தையும் சதையுமாக கொன்று குவித்து இறுக்கமான முகத்துடன் இருந்து தங்கை மகளுக்காக நல்லவனாக வாழ துடிக்கும் இடத்திலும், சண்டைக் காட்சிகளிலும், கொலை செய்யும் காட்சிகளிலும் மனதை பதற வைத்து ஸ்கோர் செய்கிறார்.
தாதா மணிமாறனாக பாரதிராஜா தனக்கே உரித்தான சைகையிலும், அமைதியான வசன நடையில் வில்லனாக அசத்தியுள்ளார்.
தங்கையாக ரவீனாரவி, அம்மாவாக ரோகிணி, தங்கை குழந்தையாக அனிஷா, மணிமாறனின் அடியாள் சாமி, ரவி வெங்கட்ராமன், அஷ்ரப்மல்லிசேரி, பூராமு, ரிஷிகாந்த், ஜெயக்குமார், கானா தரணி, ஜிமிக்கிலி என்று பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் அவரவர் பங்கை சரியாக செய்துள்ளனர்.
ஷ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு இரு வேறு கோணங்களில் பயணிக்க, நடைமுறையில் நடக்கும் சம்பவங்களை வண்ணத்திலும், ஃபிளாஷ்பேக் காட்சிகளை கருப்பு வெள்ளையில் மாறிமாறி காட்சிக்கோணங்களில் காட்டி ரத்தக்களறியோடு கதையின் தன்மையை புரிய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
படத்தொகுப்பு-ராகூரன் சில இடங்களில் நீண்ட நெடு நடை பயணத்தை கொஞ்சம் எடிட் செய்திருந்தால் காட்சிகள் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
கலை-ராமு தங்கராஜ், இசை-தர்புகா சிவா ஆகிய இருவரின் பங்களிப்பு சிறப்பு.
கடத்தல் கும்பல் அவர்களுக்குள் ஏற்படும் சண்டையில் பழிக்கு பழி வாங்க புறப்படுவதே படத்தின் திரைக்கதை. அதை நான்-லீனியர் கதையாக கொடுத்து படம் முழுவதும் சண்டை, கொலை, ரத்தம் என்று சாதாராணமாக காட்டாமல் கொடூரமாக கொலை செய்வதையும் நிஜமாக காட்டி பயமுறுத்திவிடுகிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். உலக சினிமாவாக கொண்டு வரும் முயற்சியில் படம் வந்திருக்க தமிழ்ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் படமாக வெளிவந்துள்ளது.
மொத்தத்தில் ரா ஸ்டூடியோஸ் சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிப்பில், ராக்கி ரத்தத்தால் எழுதிய கல்லுக்குள் ஈரம்.