ரஹ்மானின் தமிழ் ஆர்வம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்த ’99 சாங்ஸ்’ நிகழ்வு ஹைலைட்ஸ்

0
233

ரஹ்மானின் தமிழ் ஆர்வம்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்த ’99 சாங்ஸ்’

நிகழ்வு ஹைலைட்ஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு பணிகளைத் தாண்டி திரைப்படம் ஒன்றுக்கு கதை எழுதியிருக்கிறார். ’99 சாங்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க, இஹான் பட், எடில்சி வர்கீஸ், மனிஷா கொய்லாரா போன்றோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்து இருக்கிறார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜிவி பிரகாஷ் என பல பிரபலங்கள் வந்திருந்தனர்.

விழாவில் பேசிய ரஹ்மான் படத்தை இந்தியில் தயாரித்தது தொடர்பாக விளக்கம் கொடுத்தார். “நான் தமிழகத்தைச் சேர்ந்தவன். அதனால் தமிழில் ஈஸியாக இந்தப் படத்தை எடுக்க முடியும். ஆனால், இப்படத்தின் கதை தென்னிந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதுக்கும் என எண்ணியே தயாரித்தேன். சென்னையில் ஒரு படத்தை தயாரித்து அதனை உலகப்புகழ் பெற செய்வதே எனது லட்சியம். இக்கதையும் கதையின் பின்புலமும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் சென்றேன். அங்கே வெற்றி பெற்ற பின் வெளிநாடுகளுக்கு சென்றேன். அங்கேதான் `உங்களிடம் ஒரு கதை இருக்கிறதா’ என்று என்னிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்டபோது என்னிடம் கதை இல்லை. ஆனால், அவர்கள் கேட்டபோதுதான் நாமும் ஏன் கதை எழுத கூடாது என்று யோசித்தேன். அதன்பின் மற்றவர்கள் எப்படி கதை எழுதுகிறார்கள் என்பதை கவனித்து இதை எழுதினேன்.

சிலர் இதன் என்னுடைய வாழ்க்கை கதை என்கிறார்கள். இந்தப் படத்தின் இன்ஸபிரேஷன் வாழ்க்கையில் இருந்துதான் கிடைத்தது. இது என்னுடைய வாழ்க்கை கதை கிடையாது. நான் எழுதிய கதை. ஒரு கலைஞர் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள்தான் பின்புலம். இந்த கதை ஐந்து ஆண்டு சிந்தனையில் உருவானது” என்று பேசினார் ரஹ்மான்.

முன்னதாக விழாவில் கதயநாயகனை அறிமுகப்படுத்தும்போது தொகுப்பாளர், அவரை இந்தியில் கேள்வி கேட்டார். அப்போது அருகில் இருந்த ரஹ்மான் “இந்தி… முதலிலேயே கேட்டேன், தமிழில் பேசுவீர்களா…” என்று தமிழில் பேச அவரை அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “ரஹ்மான் சாரின் இசையுடன்தான் சிறுவயதில் இருந்து நான் வளர்ந்தேன். இப்போது அவருடைய ‘அயலான்’ பட பாடல்களால் வளரப் போகிறேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் தந்தை ரஹ்மான் சாரின் மிகப்பெரிய ரசிகர். நான் அவருடன் இணைந்து பணிபுரிகிறேன் என்று நினைக்கும்போது என் தந்தை கொடுத்த ஆசீர்வாதமாக இதை நினைக்கிறேன். எத்தனை சாதனைகள் புரிந்தாலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ரஹ்மான் சார் மிகப்பெரிய உதாரணம்” என்றார்.

“ரஹ்மான் சார் பெயரில் ஒரு பெரிய பேனர். நானும் ஹீரோ நடிச்சுட்டு இருக்கேன் சார். நானும் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கும் அட்வான்ஸ் கொடுக்கலாம் சார். நானே நேரடியாக வாய்ப்பு கேட்கிறேன்” என்று பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார் சிவகார்த்திகேயேன். பதிலுக்கு ரஹ்மானும், “இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்துகொண்டு இந்த சின்ன நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு நன்றி” என்று சிவகார்த்திகேயனை வாழ்த்தி பேசினார்.

சிறிதுநேரம் கழித்து “யுவன், அனிருத், ஜி.வி. மூவருமே இசை சூப்பர் ஸ்டார்கள். இவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இவர்களின் ஆற்றல்தான் தற்போது என்னை ஊக்கப்படுத்துகின்றனர். ஒருவருக்கு வயதாகும்போது இளம் தலைமுறையினரிடமிருந்து நாம் எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசினார் ரஹ்மான்.