ரஜினிகாந்த் – கமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜின் படத்தில் திடீர் மாற்றம்

0
580

ரஜினிகாந்த் – கமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜின் படத்தில் திடீர் மாற்றம்

மாநகரம், கைதி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கும் என்றெல்லாம் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன.

ஆனால் கொரோனா அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது. தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘அண்ணாத்த’ அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் சித்ரா லட்சுமணன் அத்தகவலை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அதில், கமல்ஹாசன் பிக்பாஸ் புரமோ வீடியோவில் தோன்றியிருக்கும் புதிய லுக்கில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கமல்ஹாசன் தன்னிடம் தெரிவித்ததாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

இதனால் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை இயக்க இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. ஆனாலும் கமல்ஹாசனிடமிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.