மீண்டும் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார் ஹரிஷ் உத்தமன்..

0
183

மீண்டும் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார் ஹரிஷ் உத்தமன்..

சினிமாவில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர் ஹரிஷ் உத்தமன். கேரளாவைச் சேந்த ஹரிஷ் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பாராமவுன்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸில் சில ஆண்டுகள் பணிபுரிந்துவந்தார்.

இதனையடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தா’ என்ற படம் மூலமாக இயக்குநர் சூரிய பிரபாகரன் ஹரிஷ் உத்தமனை கதாநாயகனாக்கினார். இந்தப் படத்துக்காக நார்வே திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றார் ஹரிஷ்.

தொடர்ந்து அபியும் நானும், மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கத்தில் ‘கௌரவம்’ படத்தில் நடித்தவர், சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாண்டியநாடு’ படம் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதன்பின்பு தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன், துணை நடிகராக மாறினார். மேலும், `தனி ஒருவன்’, ‘பாயும் புலி’, ‘றெக்க’, ‘தொடரி’, ‘பைரவா’, ‘டோரா’ எனப் பல படங்களில் அந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஹரிஷ் உத்தமன், சின்னு குருவில்லா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள ஹரிஷ் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் அம்ரிதா கல்யாண்பூர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், திருமணமான ஒரு வருடத்துக்குள் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இச்சூழலில் ஹரிஷ், மலையாள நடிகை சின்னு குருவில்லா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் மாவேலிக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையான முறையில் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்களின் திருமணத்தை இருவரும் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹரிஷ் உத்தமன் திருமணம் செய்துள்ள நடிகை சின்னு குருவில்லா மலையாளப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஃபகத் பாசில் நடிப்பில் தேசிய விருது வென்ற திரைப்படமான ‘நார்த் 24 காதம்’, மம்மூட்டியின் ‘கஸபா’ போன்ற ஒருசில படங்களில் நடித்துள்ளார்.