மிருகா விமர்சனம்

0
272

மிருகா விமர்சனம்

ஜாக்குவார் ஸ்டுடியோ சார்பில் பி வினோத் ஜெயின் தயாரித்திருக்கும் மிருகா அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-எம்.வீ.பன்னீர்செல்வம், இசை-அருள்தேவ், மக்கள் தொடர்பு-நிகில்.

ஸ்ரீகாந்த் தனிமையில் வாழும் பணக்கார பெண்களை குறி வைத்து அவர்களுடன் பழகி நம்ப வைத்து திருமணம் செய்து கொண்டு பின்னர் பணம், நகை அனைத்தையும் சுருட்டிக் கொண்டு அவர்களை அடையாளம் தெரியாமல் கொலை செய்து விட்டு தப்பிப்பதில் கில்லாடி. கோவாவில் ஒரு குடும்பத்தை கொலை செய்து விட்டு தப்பிக்க முயலும் போது பக்கத்து வீட்டு பெண்ணிடம் மாட்டிக் கொள்கிறார்.  அந்த பெண் ஊட்டியில் இருக்கும் தன் பணக்கார அக்கா ராய் லட்சுமியை ஏமாற்றி சொத்தை அபகரித்து கொடுக்குமாறு ஸ்ரீகாந்தை மிரட்டுகிறார். ஸ்ரீகாந்தும் ஊட்டிற்கு வந்து ராய் லட்சுமியை நம்பவைத்து திருமணம் செய்து கொள்கிறார். இறுதியில் ராய் லட்சுமியை கொலை செய்து ஸ்ரீகாந்த் சொத்தை அபகரிக்கிறாரா? இல்லை ராய் லட்சுமி ஸ்ரீகாந்தின் உண்மையான எண்ணத்தை அறிந்து தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஸ்ரீகாந்த் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்த முயற்சிசெய்கிறார். அழகு பதுமையாக வரும் ராய் லட்சுமி கிளாமரை தவிர்த்து பொறுப்புள்ள அம்மாவாகவும், அக்காவாகவும் தன் பங்களிப்பை கொடுத்துள்ளார். மற்றும் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி ஆகியோர் மிளிர்கின்றனர்.
அருள் தேவ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் த்ரில்லர் படத்திற்கான அம்சங்களை சரியாக கொடுத்துள்ளார்.

எம்.வீ.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு ஊட்டி அழகையும், புலியின் கிராபிக்ஸ் காட்சிகளிலும் திகிலான அனுபவத்தை ஏற்படுத்துகிறார்.
இயக்குனர்-ஜே.பார்த்திபன். வசீகரிக்கக்கூடிய தன்மையும், புத்திகூர்மையும் கொண்ட கொலைகாரன் ஏதிர்பாராத விதியால் பெண்ணை ஏமாற்ற நினைக்க அது தனக்கே ஆபத்தில் முடிந்து முடிவை தேடிக்கொள்வதே படத்தின் திரைக்கதை. ஸ்ரீகாந்தை விட புலியின் பில்டப் தான் அதிகம்.இறுதியில் வன மிருகம் மனித மிருகத்தை அழிப்பதே மிருகா படத்தின் க்ளைமேக்ஸ். இறுதிக் காட்சியில் வீட்டில் மாட்டிக்கொள்ளும் புலி மற்றவர்களை வேட்டையாட முயற்சித்திருப்பதை கொஞ்சம் அளவாக வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் மிருகா பயமுறுத்தவில்லை.