மாஸ் காட்டும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்… டிரைலரை கொண்டாடும் ரசிகர்கள்!

0
157

மாஸ் காட்டும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்… டிரைலரை கொண்டாடும் ரசிகர்கள்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சத்யராஜ், திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் எதற்கும் துணிந்தவன் சூர்யா என்று பாராட்டியுள்ளார்.

ஜெய்பீம் போன்ற படத்தில் நடித்ததே துணிவு தான். அவருக்கு புரட்சி நாயகன் சூர்யா என பட்டம் கொடுக்கிறேன் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்பேத்கர், பெரியார் கருத்துகளை திரைப்படங்களில் அதிகம் காட்ட வேண்டும். சூர்யா ரசிகர்கள் அவரை பின்பற்ற வேண்டும். கல்விக்கொடை, வள்ளல் தன்மை, எதையும் துணிச்சலாக பேசுவதை பின்பற்றவும் என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சத்யராஜ், திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். எம்ஜிஆர் அப்படித்தான் இருந்தார். பெரியார் சீடன் என்பதால் என் மனதில் பட்டதை அப்படியே பேசுவேன். அதனால் எனக்கு மார்க்கெட் போனாலும் பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.