மாறுபட்ட கதாபாத்திரத்தில் ‘களவாணி’ திருமுருகன் நடித்து வெளியான ‘ஓணான்’ திரைப்படம்!
பல வருடம் முன்பு, இயகுநர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா, திருமுருகன், கஞ்சா கருப்பு நடித்து வெளியான திரைப்படம் களவாணி.
எதார்த்தமான கதைக்களம் மட்டுமல்லாமல், நடிகர்களின் எதார்த்த இயல்பான நடிப்பும் இப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியமைத்தது. இப்படத்தின் மூலம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட நடிகர்களாக விமல் மற்றும் களவாணி படத்தின் வில்லன் திருமுருகன் பிரபலமாகினர்.
இயக்குநராகவும், நடிகராகவும் பல பரிமாணங்களில் தோன்றிய திருமுருகன் களவாணி திரைப்படத்தைத் தொடர்ந்து ஈட்டி, பென்சில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். வித்தியாசம் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் திருமுருகன் தற்போது அப்படி ஒரு வித்தியாசம் நிறைந்த கதைக்களனில் ஹீரோவாகியிருக்கிறார்.
எலிஃபெண்ட் ஃப்ளை எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சென்னன் இயக்கியுள்ள ஓணான் திரைப்படத்தில் தான் நடிகர் திருமுருகன் ஹீரோவாகியிருக்கிறார். மாறுபட்ட தோற்றத்திலும், உடல்மொழியிலும், நடிப்பிலும் திருமுருகன் தோன்றும் இந்த கேரக்டர் பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்படாத கேரக்டராக கவனம் ஈர்க்கிறது.
ஓணான் படத்தில் நாயகன் திருமுருகனுடன் காதல் மொழி பேசும் விழிகளால் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத், காமெடியில் இருந்து சற்றே மாறி, முற்றிலும் வேறொரு பரிமாணத்திலும் காளி வெங்கட், சிரிப்புக்கு வஞ்சமில்லாமல் கதையை எடுத்துச் செல்லும் சிங்கம் புலி நடித்திருக்கின்றனர். தவிர முக்கிய முதன்மை கதாபாத்திரங்களில் சரவண சக்தி, பாசக்கார தந்தை கேரக்டரில் ‘பூ’ ராமு தம்முடைய அசத்தலான நடிப்பு பங்களிப்பை தந்துள்ளனர்.
படத்திற்கு பக்க பலமாக ஆண்டனி ஆப்ரகாமின் இசை விளங்குகிறது. ரசிக்க வைக்கும் பாடல்களாக ‘கள்ளிக்காட்டுப் பருந்தே’, ‘மனசுக்குள் இவன் வந்த மாயம் என்ன’ பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கின்றன. இந்த படத்தை எலிஃபெண்ட் ஃப்ளை எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரஞ்சித்குமார்.P.R தயாரித்துள்ளார்.
கதைநாயகனை மன நோயாளி, கொலைகார சைக்கோ என நம்ப வைக்கும் இந்த படத்தின் திரைக்கதை, முடிவில் தரும் சர்ப்ரைஸ் பார்வையாளர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தைத் தரும் என நம்புவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.