மார்க் ஆண்டனி (இந்தி) படத்துக்கு சான்றிதழ் பெற ‘சென்சார் போர்டு’ அதிகாரிகளுக்கு ரூ.6½ லட்சம் லஞ்சம் – நடிகர் விஷால் புகார்

0
168

மார்க் ஆண்டனி (இந்தி) படத்துக்கு சான்றிதழ் பெற ‘சென்சார் போர்டு’ அதிகாரிகளுக்கு ரூ.6½ லட்சம் லஞ்சம் – நடிகர் விஷால் புகார்

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து பார்த்து ரசித்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பை பலரும் பாராட்டினர். இதையடுத்து விஷாலும், எஸ்.ஜே. சூர்யாவும் படத்தின் வரவேற்புக்கு அவர்களது X தள பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, படம் வெளியாகி 9 நாட்கள் முடிவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெற ரூ.6.5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்று நடிகர் விஷால் மும்பை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) மீது குற்றம் சாட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள விஷால், “ஊழலைச் சகித்துக் கொள்ள முடியாது. அதுவும், அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழலைச் சகித்துக் கொள்ளவே முடியாது. கடந்த வாரம் வெளியான எனது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்திப் பதிப்பிற்கு ‘CBFC’ சான்றிதழ் பெறுவதற்கு மும்பையில் இருக்கும் திரைப்பட சான்றிதழ் அலுவலகத்திற்கு (CBFC) படத்தை அனுப்பினோம். ஆனால், ரூ.6.5 லட்சம் கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதன்படி, படத்தின் திரையிடலுக்கு ரூ.3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என இரண்டு பரிவர்த்தனையாக மொத்தம் ரூ.6.5 லட்சம் பணத்தைப் பரிவர்த்தனைச் செய்தோம்.

கடைசி நேரத்தில் திரைப்படத்தை வெளியிட எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. எனவே, இடைத்தரகராக இருந்த மேனகாவிற்குப் பணத்தை அனுப்பினோம். அதன் பிறகுதான் ‘மார்க் ஆண்டனி’ இந்தியில் வெளியானது. இதுபோன்ற ஒரு மோசமான சம்பவத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் எதிர்கொண்டதேயில்லை.

நாங்கள் கொடுத்த பணத்திற்கான பரிவர்த்தனை பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறேன். இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் எனது பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். இனி எந்தவொரு தயாரிப்பாளருக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது. யாருக்கும் இனி இதுபோல் நடக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.