மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளித்துள்ள ‘மார்கழி திங்கள்’ திரைப்பட குழுவினர்
உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளித்த சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்களுக்கு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன் அவர்கள் பாராட்டு
அக்டோபர் 5 அன்று ‘மார்கழி திங்கள்’ திரையரங்குகளில் வெளியாகிறது
உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மார்கழி திங்கள்’ திரைப்பட குழுவினர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்களை இன்று சந்தித்த ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு சுசீந்திரன், இயக்குநர் திரு மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவங்களை அவரிடம் சமர்ப்பித்தனர்.
தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ள
‘மார்கழி திங்கள்’ படக்குழுவினரின் விவரங்கள் வருமாறு:
1. தயாரிப்பாளர் சுசீந்திரன்
2. இயக்குநர் மனோஜ் பாரதிராஜா
3. ஷியாம் செல்வன்
4. ரக்ஷனா
5. பன்னீர்செல்வம் ஆர் டி
6. அபிநயா
7. ரேணுகா தேவி
8. தர்ஷன்
9. ஹெர்ஷன்
10. கவின்
11. சூர்யா டி
12. அசோக் குமார்
13. வர்ஷினி
14. நக்ஷா சரன்
15. ஐ பி முருகேஷ் பாபு
16. டி இளங்கோ
இவர்களது படிவங்களை ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரிவித்துள்ள மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ள ‘மார்கழி திங்கள்’ திரைப்பட குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலரும் இவ்வாறு முன்வந்து உதாரணமாக திகழ்வார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.
இப்படத்தின் தயாரிப்பாளரும் முன்னணி இயக்குநருமான சுசீந்திரன் கூறுகையில், “உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு மக்களின் நல்வாழ்வு மேல் அவருக்கு உள்ள பேரார்வத்தை காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ‘மார்கழி திங்கள்’ திரைப்படக் குழுவை சேர்ந்த நாங்கள் எங்கள் உடல் உறுப்புகளை தனம் செய்வதற்கு முன் வந்துள்ளோம். எங்களை ஊக்குவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.
இயக்குநர் மனோஜ் பாரதிராஜா கூறுகையில்,” இது ஒரு மிக சிறந்த திட்டம். எங்களைத் தொடர்ந்து திரையுலகத்தை சேர்ந்த மேலும் பலரும் தங்களது உடல் உறுப்புகளை தனம் செய்ய முன் வருவார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அக்டோபர் 5 அன்று ‘மார்கழி திங்கள்’ திரையரங்குகளில் வெளியாகிறது. புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.
இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘நாடோடி தென்றல்’ ஆகும்.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்கிறார்.
பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு மனோஜ் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குநராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது, அதனையொட்டி அவரை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது என்று மனோஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.