மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்க ஏங்குகிறேன் – வசுந்தரா
எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா.
தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அந்தவகையில் கண்ணே கலைமானே, பக்ரீத் ஆகிய படங்களைத் தொடர்ந்து இவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே மற்றும் தலைக்கூத்தல் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
அடுத்தடுத்த தனது படங்கள் குறித்தும், வெப்சீரிஸ் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வசுந்தரா.
“கண்ணை நம்பாதே’ உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த் என மல்டிஸ்டார் படமாக உருவாகியுள்ளது.
.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் எனக்கு கொஞ்சம் மாடர்னான கதாபாத்திரம்..
அதிர்ஷ்டவசமாக இந்த படத்தில் எனக்கு மாடர்ன் பெண் கதாபாத்திரம் கிடைத்துவிட்டது. ரொம்ப நாளாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஏங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட சொல்லலாம்.
பேராண்மை படத்தில் நடித்தது போன்று ரொம்ப நாளைக்கு பின் இதில் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் ஒரு கதாபாத்திரம்.
கொரோனா தாக்கத்திற்கு முன்பே துவங்கிய இந்த படம் அதன்பிறகு இடைவெளிவிட்டு மீண்டும் படமாக்கி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த இடைவெளியை சமாளித்து எனது கதாபாத்திரத்தை மெயின்டெயின் செய்து நடிப்பது தான் சவாலான விஷயமாக இருந்தது. இயக்குநரின் சப்போர்ட் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. அவருக்கு ஒரு பெரிய நன்றி.
இந்த படத்தில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கின்றன. கண்ணே கலைமானே படத்தில் பார்த்ததுபோலத்தான் எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார்.
சண்டைக்காட்சிகளின்போது யாருக்கும் அடிபட்டுவிடக் கூடாது என உதயநிதி கவனம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது. தற்போது தமிழ் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆகிவிட்ட அவருக்கு என்னுடைய மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல லென்ஸ் படத்தை இயக்கிய ஜேபி (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) டைரக்ஷனில் தற்போது தலைக்கூத்தல் என்கிற படத்தில் நடித்துள்ளேன்.
சமுத்திரக்கனி, கதிர், வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சமுத்திரக்கனியின் ஜோடியாக நடித்துள்ளேன்.
சில கிராமங்களில் வயதான உடல்நலம் பாதிக்கப்பட்ட பெரியவர்களை தலைக்கூத்தல் என்கிற முறையில் நடத்தும் நடைமுறை உள்ளது. அதை மையப்படுத்திதான் இப்படம் உருவாகி உள்ளது.
சமுத்திரக்கனி சென்டிமென்டான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது சமுத்திரக்கனியின் நடிப்பைப் பார்த்து நாங்கள் அழுதது பலமுறை நடந்தது. அந்த அளவிற்கு உணர்வுப்பூர்வமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம் இப்படி சென்டிமென்டான காட்சிகளை படமாக்கிக்கொண்டு இருக்கும்போது, பக்கத்து வீட்டில் ஓடும் ஒரு மிக்சி சத்தமோ அல்லது வெளியே ஐஸ் விற்பவர் போடும் சத்தமோ திடீரென உள்ளே நுழைந்து அந்த சூழலின் சீரியஸ் தன்மையையே மாற்றி காமெடி ஆக்கிவிட்ட நிகழ்வுகளும் நடந்தது.
அந்த கலகலப்பான சூழலிலிருந்து மீண்டும் இறுக்கமான மனநிலைக்கு மாறி அந்த காட்சிகளில் நடிப்பதும் சவாலான விஷயமாகத்தான் இருந்தது.
அதிலும் இந்த படத்தின் காட்சிகள் லைவ் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். தரமான, வித்தியாசமான படங்களை எப்போதும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தந்து வந்துள்ளது. உதாரணமாக விக்ரம் வேதா, மண்டேலா போன்ற படங்களை சொல்லலாம். தலைக்கூத்தலும் அப்படியொரு தரத்தில் மக்களைக் கவரும்.
இதுதவிர லட்சுமி நாராயணன் என்பவர் இயக்கத்தில் திரில்லர் ஜானரில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன்.
இவர் ஏற்கனவே பப்கோவா என்கிற வெப்சீரிஸை இயக்கியவர். இந்த புதிய வெப்சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
ஓடிடி தளங்கள் இப்போது பார்வையாளர்களின் ரசனையை மாற்றும் விதமாக புதுவிதமான படைப்புகளைக் கொடுத்து வருகின்றன.
ஒரு புது முயற்சி எடுப்பதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஓடிடி தான் சரியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஓடிடி தளத்திற்கு நிறைய புது இயக்குநர்கள் வருகிறார்கள்.
அந்தவகையில் அதுவும் நல்ல மாற்றம்தானே.. ??
சினிமா என்ன ஆகுமோ என்று பலரும் கவலைப்பட்டார்கள். ஆனால் எப்போதுமே சினிமா போன்ற பொழுதுபோக்குத் துறை தனக்கான வழியைத் தானே கண்டுபிடித்துக் கொள்ளும்.
இந்த 2022 அதை சவாலாக ஏற்றுக்கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படங்கள் வெளியாகி, தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்று விட்டன.
பேராண்மை படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கும் பொன்னியின் செல்வன் ஜெயம் ரவிக்கும் எவ்வளவோ வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.
பேராண்மையில் ரொம்ப கண்டிப்பானவராக காட்சியளித்தவர் இதில். இன்னும் பக்குவப்பட்ட ஒரு நடிகராக அந்த கதாபாத்திரத்திற்கு என அழகாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
இதுபோன்ற ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது.
2023ல் இன்னும் நிறைய ஓடிடி படங்கள் பண்ண வேண்டும். குறிப்பாக அதிக அளவில் மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்” என்று கூறுகிறார் வசுந்தரா..