மழையோடு பேரழகாய்… ரசிக்க வைக்கும் கர்ணனின் ‘திரெளபதையின் முத்தம்’ பாடல்!

0
153

மழையோடு பேரழகாய்…

ரசிக்க வைக்கும் கர்ணனின் ‘திரெளபதையின் முத்தம்’ பாடல்!

மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பகுதியை படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். டிசம்பர் 9-ம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வந்த படக்குழு ஏப்ரல் 9-ம் தேதி ‘கர்ணன்’ திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்தது.

அதைத்தொடர்ந்து புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு இன்று 3-வது பாடலை வெளியிட்டுள்ளது. ‘தட்டான் தட்டான்’ என்று தொடங்கும் இந்தப் பாடல் காதல் பாடலாக அமைந்துள்ளது. யுகபாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலை தனுஷ் மற்றும் மீனாட்‌சி இளையராஜா பாடியுள்ளனர். கர்ணன் படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற கிடாக்குழி மாரியம்மாள் பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதேபோல் இரண்டாவது பாடலான ‘பண்டாரத்தி புராணம்’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

மழை அழகு. அதனோடு, கிராமத்துச் சூழல், தனுஷ் குரல், மேக்கப் இல்லாத ரஜிஷா விஜயன்,  சந்தோஷ் நாராயணன் இசை அத்தனையும் ஒன்று சேர்ந்து பேரழகாய் இருக்கிறது பாடல். ‘மழையில் நனைந்த மாதிரியே இருக்கிறது’ என்று பாராட்டித் தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.