மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா உறுதி; நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு : திரையுலக பிரபலங்கள் இரங்கல்

0
205

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா உறுதி; நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு : திரையுலக பிரபலங்கள் இரங்கல்

பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று காலை 3 மணிக்கு காலமானார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அதற்காக அவர் கடந்த 20 ஆம் தேதி அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் கே.வி.ஆனந்தின் மனைவிக்கும் அவரது மகள்களான இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதும், அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் குணமடைந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அதனைத்தொடர்ந்து ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கே.வி.ஆனந்த் காலமாகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அநேகன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நடிகைகள் குஷ்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அவருக்கு தங்களது இரங்கலை தனது சமூகவலைதளப்பக்கங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.