மருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்?
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் உடல்நலத்தைப் பேணுவதற்காக அனைத்துப் பணிகளில் இருந்தும் சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள இருப்பதாகவும், அதற்கு முன்னர் சதக் 2 டப்பிங் வேலைகளை முடித்து விடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த வாரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதேசமயம் அவர் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பினார்.
இதனைத்தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சஞ்சய் தத், தனது நலம் விரும்பிகள் தன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார். அவரது மனைவி மானாயத தத் கூறும் போது அவர் ஒரு போராளி. வாழ்வின் எல்லா சோதனைக் கட்டத்தையும் போராடியே வென்றுள்ளார். அவரது ரசிகர்கள் தேவையில்லாத வதந்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம். இந்தக் காலக்கட்டத்தை நாங்கள் கடந்து வருவதற்கு நிறைய வலிமையும், பிரார்த்தனைகளும் தேவை. எங்களது குடும்பம் கடந்த வருடங்களில் பல சோதனைளைத் தாண்டி வந்துள்ளது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று கூறினார்.
இந்நிலையில் சஞ்சய் தத் தனது உடல் நலத்தைப் பேணுவதற்காக அனைத்துப் பணிகளில் இருந்தும் ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும், அதற்கு முன்னார் சதக் 2 படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இவர் கே.ஜி.எப். படத்தின் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.