மக்கள் மனதில் என்றென்றும் மதுரை மைந்தன் ஸ்ரீராம் கார்த்திக்

0
409

மக்கள் மனதில் என்றென்றும் மதுரை மைந்தன் ஸ்ரீராம் கார்த்திக்

தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றும் பல கலைகளில் சிறந்த விளங்கிய தொன்மையான நகரம் மதுரை. இந்த தூங்கா நகரத்திலிருந்து சென்னைக்கு வந்த பல இளைஞர்களின் கனவு, ஆசை, தேடல், முயற்சி, உழைப்பு ஆகியவற்றை தமிழ் சினிமா உலகம் அங்கீகரித்து அரவணைத்து பல துறைகளில் குறிப்பாக இயக்குனர்களாக, நடிகர்களாக மிளிர்ந்து உயர பேரும், புகழும் பெற்றுத் தந்து உச்சத்தில் வைத்து கொண்டாடியிருக்கிறது. அந்த வரிசையை எட்டிப் பிடிக்க தன் விடாமுயற்சியை கைவிடாமல் உயர்த்து கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக்.தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் வெளிவர காத்திருக்கும் மங்கி டாங்கி படத்தின் கதை நாயகன்.
மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற கன்னி மாடம் புகழ் ஸ்ரீராம் கார்த்திக்கின் உத்வேகம் பிரமிக்க வைக்கும். அவரிடம் நடந்த நேர்காணல் உரையாடலின் சாரம்சம்.
இவருடைய பெயரில் ஏற்கனவே நடிகர்கள் இருந்தும் தன் சொந்த பெயரான ஸ்ரீராம் கார்த்திகேயன் என்பதை சினிமாவிற்காக ஸ்ரீராம் கார்த்திக் என்று வைத்துக் கொண்ட மதுரை மண் கமழும் இளைஞர்.பள்ளிப் படிப்பை மதுரையில் முடித்து பிஎஸ்சி தகவல் தொழில்நுட்ப துறையில் உயர்கல்வியை திருச்சியில் முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் பல்கலைக்கழக நிலையில் சிறந்த ஒரங்க நடிகராக (மைம் ஆர்ட்டிஸ்ட்) மிளிர்ந்தார். பின்னணி இசை மட்டுமே ஒலிக்க தன்னுடைய உடல்மொழியால் பார்வையாளர்களுக்கு காட்சிகள் புரியும்வண்ணம் நடிக்கும் மோனோ ஆக்டிங் புகழ் தேடி தந்தது. திருச்சியில் பல புகழ்பெற்ற நாடககுழுக்களில் சேர்ந்து தன் நடிப்புத் திறனை மேலும் வளர்த்து கொண்டார். சினிமாவைத் தவிர கிரிக்கெட், கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
கோட்டைக்கு பேர் போன திருச்சியிலுருந்து சினிமா கோட்டையைப் பிடிக்க தன் திறமையின் மேல் நம்பிக்கை பிறக்க சினிமாவில் சாதிக்க சென்னைக்கு வந்து பல குழுக்களில் பயிற்சி பெற்றார். இவருடைய அயராக முயற்சிக்கு பலனாக 2012ல் வேணு அரவிந்த் இயக்கத்தில் நடிகர் ஜெயராமோடு இணைந்து சபாஷ் சரியான போட்டி படத்தில் நடித்தார். பின்னர் 2014ல் புகழ்மணி கண்ணன் இயக்கத்தில் ஸ்ரீபிரியங்காவுடன் 13ம் பக்கம் பார்க்க திரைப்படம் வெளிவந்தது. 2016ல் ஜேபீ இயக்கத்தில் நடிகர் கரண் நடித்த உச்சத்தில சிவா படத்தில் வாய்ப்பு கிடைத்தது. 2019ல் ரஜீஸ்பாலா இயக்கத்தில் வண்டி படத்தில் விதார்;த், சாந்தினி, ஜான் விஜய்யுடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரித்தார்.
வண்டி படப்பிடிப்பின் போது இரவு நேரத்தில் முக்கிய காட்சியில் ஸ்ரீராம் கார்த்திக்கின் நடிப்பை பார்த்து வியந்து போன தயாரிப்பாளர் ஹசீர் அடுத்து எடுக்கப் போகும் மங்கி டாங்கி படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இந்த புது படத்தின் படிப்பிடிப்பின் போது போஸ் வெங்கட் ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கன்னி மாடத்தின் கதையை சொல்ல மிகவும் பிடித்து போக தயாரிப்பாளர் ஹசீரிடம் அழைத்துச் சென்றார். முதலில் கன்னி மாடத்தின் கதைக்கு விஜய்சேதுபதி போன்ற நடிகர்களை நடிக்க வைக்கத்தான் நினைத்தனர். பின்னர் இந்த முயற்சி கைகூடாமல் போக ஸ்ரீராம் கார்த்திக்கையே நடிக்க வைத்தனர். எதிர்பாராமல் இந்த வருடம் வெளியான (2020ல்) கன்னி மாடம் படம் தான் ஸ்ரீராம் கார்த்திக்கிற்கு திருப்புமுனையாக அமைந்தது. படத்திற்காக தன் கெட்டப்பை மாற்றி தாடியுடன் அழுத்தமான இயல்பான கதாபாத்திரத்தில் படம் முழுவதும் தனித்து நின்று நடிப்பில் அசத்தினார். இந்தப் படத்தை வேறொரு தயாரிப்பாளர் தயாரித்தாலும் ஸ்ரீராம் கார்த்திக்கையே நடிக்க வைத்திருப்பேன் என்று இயக்குனர் போஸ் வெங்கட் பெருமிதமாக கூறியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

தற்போது ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் மங்கி டாங்கி படத்தை அபி ஆனந்த் மற்றூம் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை என்ற கருத்தைக் கொண்டு இரண்டு நபர்களைச் சுற்றி கதை பயணிக்க மங்கியாக ஸ்ரீராம் கார்த்திக், டாங்கியாக கிஷோர்குமார் நடித்து படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளிவர தயாராக உள்ளது. தனக்கு மங்கி டாங்கி பேசும் படமாக அமையும் என்று ஆணித்தரமாக ஸ்ரீராம் கார்த்திக் நம்புகிறார்.
இப்பொழுது இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த அஷ்வின் பரத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு மற்ற நடிகர் நடிகையர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார் ஸ்ரீராம் கார்த்திக்.
தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் இரண்டு படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீராம் கார்த்திக்.இவரின் முதல் தமிழ் படமான சபாஷ் சரியான போட்டி படத்தின் மலையாள ரீமேக் 2012ல் கோச்சி டூ கோடம்பாக்கம் மலையாள படம்; வெளியானது.அதன் பின் இன்னொரு மலையாள படத்தில் நடித்து முடித்து வெளி வர காத்திருக்கிறது.
ஹசீர் தயாரிக்கும் படங்களில் தனக்கென்று ஒரு இடம் எப்பொதும் உண்டு என்றும் என்னுடைய உடன் பிறவா சகோதரர் ஹசீர் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். தயாரிப்பாளர் ஹசீர் எப்பொழுது கூப்பிட்டாலும் கதை கேட்காமலேயே உடனே நடித்து கொடுப்பேன் என்று முழு மனதுடன் சொன்னார்.
தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப தனியாக மட்டுமல்ல மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயாராக உள்ளார். இயக்குனர் போஸ் வெங்கட் அடுத்த படத்தை இயக்கி விட்டு வர அதற்குள் தன்னை இரண்டு மூன்று படங்கள் நடித்து முடித்து விட்டு வர சொன்னதாகவும், இவருக்கென்றே ஒரு கதையை வைத்திருப்பதாகவும், இவரைத் தவிர வேறு யாரும் அதில் நடிக்க முடியாது என்று இயக்குனர் போஸ் வெங்கட் சொல்லி அது வரை காத்திருக்கச் சொல்லியிருக்கிறார் என்று பெருமிதத்துடன் சொன்னார் ஸ்ரீராம் கார்த்திக்.
கன்னி மாடம் படம் வெளிவந்த போது இயக்குனர் போஸ் வெங்கட்டிற்கு மிரட்டல், நாகரீகமற்ற வார்த்தைகளால் திட்டியும் நேரிலும் முகநநூலிலும் வந்த பதிவால் மனஉளைச்சலில் ஏற்பட்டதாக கூறினார். இதே நிலைமை தான் தனக்கும் நடந்தது என்றும் கன்னி மாடம் படத்தில் வெளிவந்த போது ஒரு பேட்டியில் எல்லோரும் எந்த மாதிரி படம் வேண்டுமானலும் பண்ணலாம் ஆனால் அந்தப் படம் யாரிடமும் வன்மத்தை விதைக்கக்கூடாது படம் பார்த்து விட்டு வரும் நபர் தன் அக்காவோ, தங்கையோ இப்படி செய்தால் வெட்டிவிடுவேன் என்று கூறுவது தவறு. அது நல்லதல்ல. இதை தடுக்க வேண்டுமானால் இயக்குனரால் மட்டுமே உதவி செய்ய முடியும். அவர்கள் இதை படம் எடுத்தால் தான் மக்களுக்கு தெரிய வரும். ஜாதி மதம் பேதமில்லாமல் எல்லோரும் இருக்கும் இடம் தியேட்டர். ஒரு சாரர் மட்டுமே உட்கார்ந்து படம் பார்க்கும் இடம் தியேட்டர் கிடையாது என்று பேட்டியில் கூறியிருந்தேன். படத்தில் நடித்ததை விட பேட்டியை கேட்ட பின்னர் திட்டி வசை மாறி பொழிந்தவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். படத்தின் நோக்கம் சரியானது தான் திரும்ப திரும்ப இந்த மாதிரி படங்கள் வரவேண்டாம் என்பது தான் மக்களின் கருத்து என்பதை புரிந்து கொண்டேன். இந்த புதிய அனுபவம் என்னால் மறக்க முடியாத அளவு மனதில் பதிந்து விட்டது.
கன்னி மாடம் படத்தில் ஒருபுறம் இந்த மாதிரி விமர்சனங்கள் எழுந்தாலும். இன்னொருபுறம் கண்களாலேயே முழு கதையையும் புரிய வைத்து விட்டாய் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து புகழாரம் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் மக்களின் பேராதரவுடன் கன்னி மாடம் வெற்றியடைந்தது.
இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் ரஞ்சித் , இயக்குனர் ராஜுமுருகன், இயக்குனர் சமுத்திரகனி ஸ்ரீராம் கார்த்திக்கின் காட்சிகளை விவரித்து புகழ்ந்து பேசியதோடு, க்ளைமேக்ஸ் காட்சியில் யாராக இருந்தாலும் ஒவர் ஆக்டிங் செய்து விடுவார்கள், ஆனால் கேரக்டரை சரியாக புரிந்து நன்றாக செய்திருப்பதாக கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ரஞ்சித் தன் தயாரிப்பு நிறுவனத்தில் நிச்சயம் நடிக்க வைப்பேன் என்று உறுதியளித்திருக்கிறார் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டாhர் ஸ்ரீராம் கார்த்திக்.
இப்பொழுது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது என்றாலும், இந்தியாவில் குறிப்பாக தென்இந்தியாவின் பாரம்பரிய சமையல் முறையில் உள்ள மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு போன்ற சமையல் பொருட்களே இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்கும் என்பது தன்னுடைய கருத்தாகவும், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் அனைவரும் இதிலிருந்து விடுபடலாம் என்கிறார்.
சினிமா பின்பலமே இல்லாமல் மதுரையில் இருக்கும் பெற்றோர் தொழிலதிபர் ரங்கராஜ்-ஜோதி ஆகியோரின் ஒத்துழைப்பும், தன்னுடைய சொந்த முயற்சியாலும், நடிப்புத் திறமையாலும் பல தடங்கல்களை தாண்டி இன்று தமிழ் சினிமாவில் அனைவரையும் கவனிக்கதக்க வகையில் சிறப்பான இடத்தை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கும் மதுரை மண்ணின் தமிழ் மைந்தன் ஸ்ரீராம் கார்த்திக் எதிர்காலத்தில் வெற்றியோடு பயணத்தை தொடங்க வாழ்த்துகிறது கலைப்பூங்கா.