மகான் விமர்சனம் : மகான் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சதிராட்டம் நடத்தும் பாசப்போராட்டம்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்து சீயான் விக்ரம் நடித்து ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் சீயான் விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், சனாந்த், வேட்டை முத்துக்குமார், ஆடுகளம் நரேன்; உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணர் இசை: சந்தோஷ் நாராயணன். மக்கள் தொடர்பு-யுவராஜ்.
காந்திய கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்த விக்ரம்(காந்திமகான்). பள்ளி ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்க 40 வயதை கடந்த பின் விபரீத ஆசை பிறந்த நாளில் ஏற்பட, தனக்கு பிடித்த காரியங்களை ஒரு நாளில் செய்து முடிக்க ஆசைப்பட்டு குடிப்பதற்காக மதுபானக்கடைக்கு செல்கிறார். அங்கே தன் பால்ய நண்பர்கள் பாபி சிம்ஹா, அவருடைய மகன் சனாந்த், வேட்டை முத்துக்குமார் ஆகியோரை சந்திக்க நேரிட நட்பு வலுப்பெருகிறது. மறுநாள் வீட்டிற்கு செல்லும் விக்ரமின் குடிபோதை நிலைமையை பார்த்து மனைவி சிம்ரன் சண்டையிட்டு மகனை அழைத்து கொண்டு பிரிந்து சென்று விடுகிறார். அதன் பின் நண்பன் பாபி சம்ஹாவுடன் சேர்ந்து சாராய வியாபாரம் செய்து கோடீஸ்வரனாகிறார். அதே சமயம் வேட்டை முத்துக்குமாரும் அரசியல்வாதியாகி படிப்படியாக உயர்ந்து அமைச்சர் பின் துணை முதல்வர் பதவிக்கு வருகிறார். மூவரின் நட்பு தொழிலில் முன்னேற்றம் அடைந்து சாராய சாம்ராஜ்ஜியம் நடத்துகின்றனர். தன் நண்பன் பாபி சம்ஹாவின் குடும்பத்தை தன்னுடைய குடும்பமாக பாவித்து சனாந்த்தை மகன் போல் கருதுகிறார். இதற்கிடையே பல வருடங்கள் கழித்து பிரிந்து சென்ற மகன் துருவ் விக்ரம் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக விக்ரமை பழி வாங்க வருகிறார். விக்ரமை பகடைகாயாக வைத்து சனாந்த்தை போட்டு தள்ள, பாபி சிம்ஹாவையும் துருவ் குறிவைக்கிறார். தன் நண்பனை காப்பாற்றுவதா? மகனை நண்பனிடமிருந்து காப்பாற்றுவதா? என்ற பதட்டத்தில் இருக்கும் விக்ரம் எடுக்கும் முடிவு என்ன? என்பதே படத்தின் அதிரடி க்ளைமேக்ஸ்.
விக்ரம் காந்தி மகான் என்ற பெயருடன் தான் சந்திக்கும் கேலி கிண்டல்களை சகித்து கொண்டு, சாதாரண குடும்ப தலைவனாக, மனைவிக்கு அடங்கிய கணவனாக அதன் பின் மனைவியின் உதாசீனத்தால் வாழ்க்கையே தடம் மாறும் நேரத்தில் அவரின் கெட்டப், ஹேர் ஸ்டைல், உடல் மொழி என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறுபடுத்தி காட்டி, நடிப்பிலும், சண்டையிலும் இன்னும் இளமை துள்ளலுடன் ஆச்சர்யபடுத்துகிறார். இறுதியில் அவர் எடுக்கும் சாதுர்யமான முடிவு சாமர்த்தியம்.
துருவ் விக்ரம் துறுதுறுவென பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், என்கவுண்டர்கள், பேசும் வசனங்கள் என்று அச்சு அசலாக விக்ரமை போன்று சாயல் தெரிந்தாலும், சில இடங்களில் தன்னால் கூட தனித்துவமாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
பாபி சிம்ஹா நண்பனுக்காக எதையும் செய்யும் கதாபாத்திரம், யதார்த்தமாக விரைப்பாக, பாசமிகு தந்தையாக வாழந்து விட்டு போகிறார். மகனாக சனாந்த் காந்திப்பா என்ற வார்த்தையை உச்சரிக்கும் விதமும், இயல்பான பேச்சும், அடக்கமான, அசத்தலான முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்துள்ளார்.
சிம்ரன் ஆரம்பத்தில் சில காட்சிகள், இறுதியில் சில காட்சிகள் என்று வந்து போகிறார்.
அரசியல்வாதியாக வேட்டை முத்துக்குமார் சிறப்பான தேர்வு, வில்லத்தனத்தில் அசால்டாக நடித்து விட்டு போகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன்; மற்றும் பலர் படத்திற்கு பக்கபலம்.
ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் பிரமிக்கும் காட்சிக்கோணங்கள் 60களில் தொடங்கும் காலகட்டம் ஆரம்பிக்கும் கதைக்களத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரை பயணித்து அச்சு அசலாக இருவேறு கோணங்களில் வெவ்வேறு வண்ணத்தில் கதைக்களத்தை வேறுபடுத்தி கொடுத்து தனி முத்திரை பதித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன்; இசை படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறார்.
மகான் என்ற தலைப்புக்கு நேர்மாறான கதைக்களம். மகானாக முதலில் வாழ்க்கையை தொடங்கி பின்னர் தனக்கென சில லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள குடும்பம் இல்லையே என்ற இழப்பை உணரும் நேரத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரமாக சொல்லும் திரைக்கதையை தன்னுடைய பாணியில் இயல்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தந்தை மகன் பழி வாங்கும் பாசப் போராட்டத்தில் யார் ஜெயித்தது என்பதை சதுரங்கம் ஆட்டம் ஆடி வெற்றி வாகை சூடி ஜெயித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
மொத்தத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்து சீயான் விக்ரம் நடித்திருக்கும் மகான் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சதிராட்டம் நடத்தும் பாசப்போராட்டம்.