மகளை முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை ஸ்ரேயா
தமிழில், ’எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து, ’மழை’, ’சிவாஜி’, ’கந்தசாமி’, ’அழகிய தமிழ்மகன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ள ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வை மும்பையில் திருமணம் செய்துகொண்டார். ஆண்ட்ரே, பல ரெஸ்டாரண்ட்களையும் ரஷ்யாவில் நடத்தி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு ரஷ்யாவில் வசித்துவரும் ஷ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை பிறந்து நான்கைந்து மாதங்களுப்பிறகே உலகிற்கு அறிவித்துள்ளார் ஸ்ரேயா.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றிரவு ஸ்ரேயா வெளியிட்டுள்ள பதிவில் ”கடந்த 2020 ஆம் ஆண்டு உலகமே கொரோனா சூழலில் வாடிக்கொண்டிருக்கும்போது நான் கர்ப்பிணியானேன். எங்களுக்கு தேவதை பிறந்திருக்கிறாள். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டோம்” என்று கணவர் மற்றும் மகளைக் கொஞ்சும் வீடியோவை பதிவிட்டு மகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆனால், இத்தனை நாள் கருவுற்றதையே ஸ்ரேயா அறிவிக்கவில்லை. தற்போது, குழந்தைப் பிறந்ததை ரகசியமாக வைத்து அதுவும் நான்கைந்து மாதங்களுக்குப்பிறகு தற்போது அறிவித்துள்ளதால் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.