பொன் மாணிக்கவேல் ஒருமுறை பார்ப்பதற்கு நிறைய விளம்பர ப்ரேக் தேவைப்படுகிறது – விமர்சனம்

0
173

பொன் மாணிக்கவேல் ஒருமுறை பார்ப்பதற்கு நிறைய விளம்பர ப்ரேக் தேவைப்படுகிறது – விமர்சனம்

நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசை. கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு.

சென்னை கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓர் பங்களாவில் உயர் நீதிமன்ற நீதிபதி கொலை செய்யப்படுகிறார். இதை விசாரிக்கும் காவல் துறை எந்த ஆதாரமும் இல்லாததால் குழப்பத்தில் இருக்கிறார்கள். காவல்துறைக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லி மேல்மட்டத்திலிருந்து அழுத்தம் கூடுகிறது. விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான பொன் மாணிக்கவேல் (பிரபுதேவா) இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கின்றனர். பொன் மாணிக்கவேல் கொலையாளியைக் கண்டுபிடித்தாரா, இல்லையா? அந்தக் கொலை யாரால் நிகழ்த்தப்பட்டது. அவர் ஏன் ஓய்வு பெற்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம். கடமை தவறாத நேர்மையான அதிகாரியாக பிரபுதேவா அவருக்கே உண்டான ஸ்டைலில் நடித்துள்ளார். ஆனால் பல காட்சிகளில் வித்தியாசம் காட்ட போக்கிரி விஜய் ஸ்டைலில் பயணிக்கிறார்.

நிவேதா பெத்துராஜ் பொன் மாணிக்கவேல் மனைவியாக சிறப்பாக செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத மறைந்த இயக்குநர் மகேந்திரன் எதார்த்த நடிப்பால் ஈர்க்கிறார்.

சுதன்சு பாண்டே மற்றும் ஸ்டைலிஷ் வில்லன் சுரேஷ் மேனன் நடிப்பில் மிரட்டல் இல்லை.

போலீஸாக வரும் பாகுபலி பிரபாகர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.

இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓகே.

சிவானந்தீஸ்வரனின் படத்தொகுப்பும், கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒரு புலனாய்வு த்ரில்லர் படத்துக்குத் தேவை விறுவிறுப்பான திரைக்கதைதான். காட்சிக்குக் காட்சி ட்விஸ்ட்டை வைத்து மேலும் பொறுமையை சோதித்து இருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் ஓடிடியில் ரிலீஸாகியுள்ள பொன் மாணிக்கவேல் ஒருமுறை பார்ப்பதற்கே நிறைய விளம்பர ப்ரேக் தேவைப்படுகிறது நமக்கு.