பேட்டரி விமர்சனம்: சி.மாத்தையன் தயாரித்திருக்கும் பேட்டரி பொது மக்கள் உஷாராக இருக்க கொஞ்சம் எச்சரித்து விழிப்புணர்வு சார்ஜ் ஏற்றுகிறது | ரேட்டிங்: 2.5/5

0
466

பேட்டரி விமர்சனம்: சி.மாத்தையன் தயாரித்திருக்கும் பேட்டரி பொது மக்கள் உஷாராக இருக்க கொஞ்சம் எச்சரித்து விழிப்புணர்வு சார்ஜ் ஏற்றுகிறது | ரேட்டிங்: 2.5/5

பேட்டரி விமர்சனம் :
நடிகர்கள்: செங்குட்டுவன், அம்மு அபிராமி, தீபக் ஷெட்டி, நாகேந்திர பிரசாத், அபிஷேக், எம்.எஸ்.பாஸ்கர், ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், மோனிகா, யோக் ஜேபி
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : வெங்கடேஷ்
ஸ்டண்ட் இயக்குனர் – ஹரி தினேஷ்
தயாரிப்பு: சி.மாத்தையன்
இயக்கம்: மணிபாரதி
பிஆர்ஒ : ஜான்சன்

சென்னையில் அடுத்தடுத்து சில வித்தியாசமான கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகள் அனைத்தும் பேட்டரியை விழுங்க செய்து நெஞ்சில் ஐஸ் புல்லட்டால் சுட்டு ஒரே விதமாக செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கு தடயங்கள் கிடைக்கவில்;லை. இந்நிலையில் ஐபிஎஸ் முடித்து விட்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டராக டூட்டியில் சேருகிறார் புகழ் (செங்குட்டுவன்). தன் ஏரியாவில் நிகழ்ந்த கொலை விசாரணை ஒன்றில் ஆர்வம் காட்டும் அவரை இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்தினாலும் அதை பொறுத்துக்கொண்டு வேலை பார்க்கிறார் செங்குட்டுவன். இந்நிலையில் அந்த இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்படுகிறார். அதேபோல் தொழில் அதிபர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இதை புகழ் போலீஸ் உதவி கமிஷனருடன் சேர்ந்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த கொலைகளை செய்தவர் புகழ்தான் என்பதை உதவி கமிஷனர் கண்டுபிடித்து விடுகிறார். அவரை கைது செய்ய முயலும் போது தொழில் அதிபரின் பார்ட்னரை கொன்று விட்டு சரண் அடைவதாக புகழ் கூறுகிறார். புகழிடமிருந்து தொழில் அதிபரின் பார்ட்னரை உயிரோடு மீட்க உதவி கமிஷனர் போராடுகிறார். புகழ் ஏன் இந்த கொலைகளை செய்கிறார்? இறுதியில் நடந்தது என்ன? புகழ் கொலைகாரராக மாற என்ன காரணம்? என்பதே படத்தின் மீதி கதை.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன் செங்குட்டுவன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளிலும் அதிரடி காட்டி அசத்தியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி பெரிய வேலை இல்லாவிட்டாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

வில்லன்களாக வரும் நாகேந்திர பிரசாத், அபிஷேக் இருவருக்கும் பெரிய அளவில் கதாபாத்திரம் அமைய இல்லை.

எம்.எஸ் பாஸ்கர் வழக்கம் போல் தனது அனுபவ நடிப்பின் மூலம் அசத்தியுள்ளார்.

சித்தார்த் விபினின் பின்னணி இசை, ஹரி தினேஷ் சண்டை காட்சி மற்றும் வெங்கடேஷ் ஒளிப்பதிவு ஓகே.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைக்கப்படுவது ‘பேஸ் மேக்கர்’ கருவி. மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு வரவுதான் இச்சாதனம். சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இதயத்துடிப்பானது நிமிடத்துக்கு 72 இருக்க வேண்டும். இந்தத் துடிப்பானது 70க்கு கீழ் குறைந்தாலும் ஆபத்து… 100க்கு மேல் அதிகரித்தாலும் ஆபத்து. இப்படி பாதிக்கப்படுபவர்களுக்கு கை கொடுப்பதே இந்த பேஸ்மேக்கர். இதய நோயாளிகளின் இதயத் துடிப்பு தினம் தினம் மாறுபட்டுக் கொண்டிருக்கும். இதை சரிசெய்ய கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பேஸ்மேக்கர். இதயத்தசைகளை மின்முனைகள் தொடர்பு கொள்ளும் போது வெளிவரும் மின் துடிப்புகளைப் பயன்படுத்தி இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது அதன் வேலை. அதாவது, ஒரு இதய நோயாளியின் இதயத் துடிப்பை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப தானே சரி செய்துகொண்டு கூடுதலாகவோ, குறைவாகவோ தானாகவே இயங்கும்.இது பேட்டரி உதவியுடன் செயல்படுகிறது.ஹார்ட் அட்டாக் என்கிற மாரடைப்பு பொதுவாக30 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரலாம். இதய பாதிப்போ பிறந்த குழந்தைக்குக் கூட இருக்கலாம். வைரஸ் தொற்றினால் கூட, சிறுவயதிலேயே கார்டியோ மையோபதி ஏற்படலாம். அதனால் இதை எந்த வயதினருக்கும் பொருத்தலாம். பெரும்பாலும் 5 லிருந்து 8 ஆண்டுகள் வரை இந்த பேஸ்மேக்கர் வேலை செய்யும். அதாவது, பேட்டரியின் வேலைப்பளுவைப் பொறுத்தே அதன் லைஃப் இருக்கும். அதற்குப்பிறகு மாற்ற வேண்டும். பொதுவாக பேஸ்மேக்கர் ரூ. 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை விலை. சிஆர்டி, ஐசிடி போன்ற அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் உள்ள பேஸ்மேக்கர்கள் விலை ரூ.10 லட்சம் வரை இருக்கும்.
இந்த பேஸ் மேக்கர் பற்றிய கதைக்களம் தான் பேட்டரி.மறு சுழற்சியில் மூன்று ஆண்டுகள் இருக்கும் ‘பேஸ் மேக்கர்’ கருவியை ஐந்து ஆண்டுகள் உத்திரவாதம் இருப்பதாக கூறி ஏமாற்றும் மெடிக்கல் மாஃபியாக்களின் கையில் சிக்கி பணத்தாசையால் பெருமளவில் குற்றங்களும் நடக்கிறது என்ற கருவை வைத்தும், இதனால் பாதிக்கபட்டு இறந்த சிறுமியின் சகோதரன் எவ்வாறு பழி வாங்கினார் என்ற திரைக்கதை அமைத்து மக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர். பாராட்டுக்கள் மணி பாரதி.

மொத்தத்தில் சி.மாத்தையன் தயாரித்திருக்கும் பேட்டரி பொது மக்கள் உஷாராக இருக்க கொஞ்சம் எச்சரித்து விழிப்புணர்வு சார்ஜ் ஏற்றுகிறது.