”பேசாப் பொருளை பேசத்துணிந்த “ஜெய் பீம்” படம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி” – சீமான்

0
147

”பேசாப் பொருளை பேசத்துணிந்த “ஜெய் பீம்” படம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி” – சீமான்

பேசாப் பொருளை பேசத்துணிந்த ஜெய் பீம் திரைப்படம் ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், “நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ்த்திரையுலகு எத்தனையோ பெருமிதங்களுக்கு இடம் கொடுத்து கலை வடிவங்களின் உச்சமாகத் திகழ்கிறது. தொடக்கக்காலத் தமிழ்த்திரைப்படங்கள் புராண இதிகாசங்களை, மேட்டிமை மக்களின் வாழ்வினை மட்டும் பேசி, எளிய மக்களின் வாழ்வியலை முற்றாக ஒதுக்கி வைத்திருந்தது. அரங்கங்களில் சிக்கித்தவித்த தமிழ்த்திரையுலகை உருமாற்றி, பாமர மக்களின் வாழ்வினை பேச வைக்க 1980களில் வந்த நமது பெருமைமிக்க முன்னவர்கள் திரைப்புரட்சியை நிகழ்த்தினார்கள்.

அதன்பிறகு, தமிழ்த்திரைக்குள் தமிழர்களின் நிறமான கறுப்பிற்கு இடம் கிடைத்தது. மக்கள் மொழிக்கு மதிப்புக் கிடைத்தது. கோவணம் உடுத்திய கிராமத்து மனிதர்கள் தோன்றினார்கள். வயல்வெளிகளிலும், அதன் வரப்புகளில் தொங்கட்டான் அணிந்த மூதாட்டிகளும், வார்ப்புகளிலும், வார்த்தைகளிலும் ஒப்பனைகளில்லாத பெண்களும் வலம் வந்தார்கள். நடைபாதைகளில் வாழும் மக்கள் கதை மாந்தர்களாக மாறினார்கள். எதிரே தோன்றுபவற்றைக் காட்டும்போதுதான் கண்ணாடிக்கு மதிப்பு. மக்களைப் பிரதிபலிக்கும்போது தான் கலைக்கு மரியாதை. அப்படி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை இரத்தமும், சதையுமாக வடித்து நம் மனசாட்சியைத் தொட்டு வினா எழுப்புகிற மதிப்பார்ந்த கலை வடிவமாக, தமிழ்த்திரைப்பட வரலாற்றிலொரு ஒப்பற்றத் திரைக்காவியமாக, ‘ஜெய் பீம்’ வந்திருப்பதாகக் கருதுகிறேன்.

படம் பார்த்து முடித்தும் மனம் கனத்து, அந்நினைவுகள் நீங்காமல் இருக்கிறேன். அதிகாரத்தின் கூர் முனைகள் எளிய மக்களின் வாழ்வினை கோரமாகக் குத்திக்கிழிக்கிற பார்க்க இயலா அவலங்களைப் படமாக ஆவணப்படுத்தி, பாடமாக மாற்றியிருக்கின்ற இத்திரைப்படத்தின் இயக்குனர் தம்பி ஞானவேல் அவர்களை‌ உச்சி முகர்ந்து பாராட்டுகிறேன்.

அதிகார உச்சங்களுக்குப் பரிவாரம் கட்டுவதுதான் தனது பணி என இருந்த சட்டத்துறையின் பொல்லாங்கு திசையினை, தனது வழக்கறிஞர் பணியிலும், நீதியரசரான பிறகும் தனது நேயமிக்கச் செயல்பாடுகளாலும் மாற்றியமைத்து நேர்மை செய்த மக்கள் நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தை ஏற்று அப்படியே திரையில் நிறுத்தி, விழி, மொழி, கண்ணசைவு, ஆற்றாமை, கோபம், பரிதவிப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தித் தேர்ந்த நடிப்பால் நெகிழச்செய்திருக்கிறார் தம்பி சூர்யா.

காலம் காலமாகப் புறக்கணிக்கப்படும் ஆதிக்குடிகளின் வாழ்வியல் படைப்பு ஒன்றை வணிகக்காரணங்களுக்காகத் துளியளவும் சிதைக்காமல் தயாரித்து நடிக்க முன் வந்ததும், ஒரு வெற்றிப்படமாகச் சகல விதத்திலும் உருவாக்கித் தந்ததற்கும் தம்பி சூர்யாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . உறங்க முடியாத இரவு ஒன்றையும், கண்கள் முழுக்க விழி நீரையும் பரிசளித்து, உள்ளமெல்லாம் ரணமாக்கி நம்மைக் கலங்க வைத்து சிந்திக்க வைத்து, செயல்படத் தூண்டியும் வினை ஆற்றுகிற இப்படத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்களையும் , நெகிழ்வான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் அதன் உட்கூறுகளின் அவசியத்தை உணர்த்தி, எளியவர்களுக்கெதிரான எதேச்சதிகார அரசியல் வரம்புமீறலைத் தடுக்க இருக்கும் ஒரே வழியான நீதித்துறையின் தேவையை உயிர்ப்போடு திரைமொழியில் காட்ட உதவிய இருளர் பழங்குடி உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

‘அனைத்துத் துன்பப்பூட்டுகளுக்குமான சாவி ஆட்சியதிகாரம் மட்டுமே’ என்கிறார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். பேசாப் பொருளை பேசத்துணிந்து, ஆதிக்குடியான இருளர்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளை உண்மையாகப் பதிவுசெய்து கலகக்குரலாக இத்திரைப்படத்தை அறச்சீற்றத்துடனும், துணிச்சலோடும் தயாரித்து வழங்கி இருக்கிற என் உயிர்த்தம்பி சூர்யா அவர்களையும், அவரது இணையர் தங்கை ஜோதிகா அவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன். ஜெய்பீம் அதிகாரத்திற்கெதிராகவும், ஆதிக்கங்களுக்கெதிராகவும் உயர்ந்திருக்கிற போர்க்கருவி” என தெரிவித்திருக்கிறார்.