புரோ டாடி படத்தின் மூலம் மீண்டும் இணைந்த மோகன்லால் – பிரித்விராஜ் வெற்றிக் கூட்டணி!

0
139

புரோ டாடி படத்தின் மூலம் மீண்டும் இணைந்த மோகன்லால் – பிரித்விராஜ் வெற்றிக் கூட்டணி!

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் பிரித்விராஜ். இப்போது மீண்டும் மோகன்லாலை வைத்து இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். முதலில் ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக `எம்பூரான்’ என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்தார்.

ஆனால், இரண்டாம் பாகம் முற்றிலும் வெளிநாடுகளில் படம் பிடிக்க வேண்டியிருப்பதால், தற்போது இருக்கும் கொரோனா சூழல் அதற்கு சாத்தியப்படாது. இதனால், அந்த திட்டத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு அதற்கு பதிலாக மோகன்லாலை வைத்தே `புரோ டாடி’ என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

காமெடி பாணியில் இந்தப் படத்தை எடுக்கவிருக்கிறார். இதுபற்றி ‘ஃபிலிம் கம்பானியன் சவுத்’ யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் “மலையாள சினிமாவில் தற்போது சீரியஸான படங்கள் அதிகரித்துவிட்டன. கொண்டாட்டமான காமெடிக்கு பஞ்சம் வைக்காத திரைப்படங்கள் வெளியாகி நிறைய காலமாகிவிட்டது. இதுபோன்ற குடும்பப் பாங்கான படங்களுக்கு ஏராளமான நடிகர்கள், அவர்களுக்கு ஏற்றவாறு காட்சிகள், இசை என்று பணிகள் நிறைய இருப்பதால், அந்த மாதிரியான படங்களை எடுக்க மறுக்கிறார்கள்.

அதனால், தற்போது மலையாள சினிமா முற்றிலும் மர்மங்கள் நிறைந்த கதையாக, கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் திரைப்படங்களாக வந்துகொண்டிருக்கின்றன. எனக்கு தெரிந்தவரை கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக மகிழ்ச்சியான ஒரு திரைப்படம் மலையாள சினிமாவில் வரவில்லை.

இந்த நிலையில்தான் சமீபத்தில் இரண்டு கதாசிரியர்கள் என்னைச் சந்தித்து ஒரு கதையைச் சொன்னார்கள். சுவாரஸ்யமாக இருந்த இருந்த அந்தக் கதையை உடனடியாக மோகன்லாலிடம் வீடியோ காலில் பேசி விவரித்தேன். கதையின் தாக்கத்தை உணர்ந்த இவர், உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அப்படி ஆரம்பமானதுதான் ‘புரோ டாடி’.

மோகன்லாலை வைத்து இரண்டாவது படமாக, ‘லூசிஃபர் 2’-ம் பாகத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா நெருக்கடி காரணமாக அது நடக்கவில்லை. என்றாலும் ‘லூசிஃபர் 2’-ம் பாகம் பிரமாண்ட படம். அதனை எடுக்க நேரம் தேவை” என்று விவரித்துள்ளார்.