பீஸ்ட் Vs KGF 2 ரிலீஸ்… கொண்டாட்ட மனநிலையில் உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள்!

0
100

பீஸ்ட் Vs KGF 2 ரிலீஸ்… கொண்டாட்ட மனநிலையில் உரிமையாளர்கள், சினிமா ரசிகர்கள்!

ஒரே நேரத்தில் கேஜிஎஃப் மற்றும் பீஸ்ட் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், `மக்கள் மீது நம்பிக்கை வைத்து கேஜிஎஃப் -2 படத்தை வெளியிடவுள்ளோம்’ என அப்படத்தின் நாயகன் யஷ் தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கே.ஜி.எஃப். கன்னட திரைப்படம் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கோலார் தங்க வயலை மையமாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட அப்படத்தின் புனைவுக்கதை, அனைத்து மொழி ரசிகர்களையும் வியக்க வைத்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாளுக்கு முன்னர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது.

இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், மக்கள் மீது நம்பிக்கை வைத்து கேஜிஎஃப்- 2 திரைப்படத்தை வெளியிடுவதாக நடிகர் யஷ் தெரிவித்துள்ளார். கேஜிஎஃப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கே.ஜி.எஃப் திரைப் படத்திற்கு கிடைத்திருக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை மகிழ்ச்சியை அளிக்கிறதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த யஷ், எட்டு மாதங்களுக்கு முன்பே தாங்கள் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டதாகவும், ஆனால் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாவதை தவிர்க்க முடியாது எனக் கூறினார்.

மேலும் யஷ் பேசுகையில், “மக்களின் வரவேற்புக்கு ஏற்ற வகையில் எங்களுக்கு இந்தப் படம் வேண்டும் என்று திரையரங்குகளை அவர்களே ஒப்பந்தம் செய்கின்றனர். மேலும் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஒரு படத்துடன் வெளியான இன்னொரு திரைப்படத்திற்கு திரையரங்குகள் குறையும், நமது படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு விதி உள்ளது. நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்து கே.ஜி.எஃப்-2 படத்தை வெளியிடுகிறோம்” என பதிலளித்தார். இருபடத்தையுமே கொண்டாடும் மனநிலைக்கு ரசிகர்கள் தற்போது வந்துவிட்டனர் என்பதும் மறுப்பதற்கில்லை. இருபடங்களுக்குமே ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருவதால் தற்போதைக்கு திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.