பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு

0
158

பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரின் தமிழாக்க திரைப்படத்தில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், அசோக் செல்வன், டி ஜே பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், கிஷோர் ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, வாமிகா மற்றும் பிபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது இந்நிலையில் சென்னையில் இதன் முனனோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது- இதில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் அமேசான் பிரைம் இந்திய பிரிவின் தலைவரான சுஸாந்த் ஸ்ரீராம் உள்ளிட்ட அமேசான் பிரைம் வீடியோவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன் போது படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜா மாடர்ன் லவ் சென்னை படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜா பேசுகையில், ப்ரைம் வீடியோவின் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் படைப்பாளிகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் வணக்கம். இந்த ஆந்தாலஜி பாணியிலான படைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளார்ந்த அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் எட்டு மாத கால அவகாசத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். ஆனால் இரண்டரை ஆண்டுகளாகிவிட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் மறக்க இயலாத அனுபவமாக மாறியது. இருப்பினும் இந்த படைப்பு சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் எனும் நாளிதழில் ‘மாடர்ன் லவ்’ எனும் தலைப்பில், அதன் வாசகர்கள் தங்களது அனுபவத்தை கட்டுரை வடிவில் பகிர்ந்து கொண்டனர். அந்தக் கட்டுரை ஆயிர கணக்கை கடந்த பிறகு, இதனை ஒரு நிகழ்ச்சியாக ஏன் உருவாக்கக் கூடாது என ஒருவர் சிந்தித்தார். அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக முதல் சீசன் வெளியானது. இதில் எட்டு கதைகளை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழியில் ஒளிபரப்பானது. இதன் வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது சீசனை ஆங்கில மொழியை கடந்து, சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்றும், அதனை இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று இந்திய மொழிகளில் உருவாக்க வேண்டும் என்றும் திட்டமிடுகிறார்கள். இந்தியிலும், தெலுங்கிலும், ‘மாடர்ன் லவ் மும்பை’, ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ எனும் பெயரில் வெளியாகி வெற்றியைப் பெற்றிருக்கிறது. தற்போது தமிழில், ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் பெயரில் தயாராகி இருக்கிறது.

தமிழில் இடம் பெற்றிருக்கும் ஆறு கதைகளும் ஏற்கனவே வெளியான கதைகள் அல்ல. நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான எட்டு கட்டுரைகளை தேர்ந்தெடுத்து, அதனை திரைக்கதையாக்கி படைப்பாக வழங்கினர். அதேபோல் ஜப்பனீஸ், டச்சு, ஸ்பானிஷ் என ஒவ்வொரு மொழிகளிலும் வித்தியாசமான கட்டுரைகளை படைப்பாக்கி வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து தமிழிலும் அந்த நாளிதழில் வெளியான மாடர்ன் லவ் குறித்த கட்டுரைகளை எங்கள் குழு பரிசிலித்து, அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, விவாதித்து, தமிழ் சூழலுக்கும் சென்னை மண்ணின் மக்களுக்கான கதையாகவும் மாற்றி உருவாக்கியிருக்கிறோம். சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுவது போல் இந்த ஆறு கதைகளையும் எழுதி இருக்கிறோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை முறை என பிரித்து இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறோம்.

காதலில் பரிசோதனை முயற்சிகளில் எதிலும் ஈடுபடாமல், வழக்கமான கதை களத்திலேயே கதாபாத்திரங்களின் மூலம், எல்லைகளை விரிவுபடுத்தி, சுவாரசியமாக புதுமையான கோணங்களில் சொல்ல இயலுமோ.. அதனை காட்சிப்படுத்தி இருக்கிறோம். ‘

யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அவருடைய பாடல்களை பயன்படுத்த முடியவில்லை. இந்த திரைப்படத்தில் டைட்டில் பாடலில் யுவனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இயக்குநர் பாலாஜி சக்திவேல், யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியதில்லை. அதனால் அவரிடம் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பமா? என கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். இயக்குநர் ராஜுமுருகனுக்கும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் இடையே ஒரு பிணைப்பு இருக்கிறது. அதனால் அவர் இயக்கிய அத்தியாயத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அத்தியாயத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.” என்றார்.

அமேசான் பிரைம் ஒரிஜினல்ஸ் இந்திய பிரிவின் தலைவரான சுஸாந்த் ஸ்ரீராம் பேசுகையில்,” மாடர்ன் லவ் சென்னை படைப்பின் குழுவினருடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரான தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது மறக்க இயலாத அனுபவம். எங்களுடைய அசலான இணைய தொடர்களுக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் இந்த தருணத்தில் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு தமிழ் திரையுலகில் ஏராளமான திறமை மிக்க கதை சொல்லிகள் இருக்கிறார்கள். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான அசல் தமிழ் இணையத்தொடர்கள், உலக அளவில் வேறு எந்த மொழியிலும் வெற்றி பெறாத அளவிற்கு மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. மீண்டும் அது போன்றதொரு சாதனையை சாத்தியப்படுத்தி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா மற்றும் அவருடைய குழுவினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ‘மாடர்ன் லவ் சென்னை’ தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறோம். தேசிய விருது பெற்ற படைப்பாளிகளுடன் இணைந்து உருவாகி இருக்கும் ‘மாடர்ன் லவ் சென்னை’, மே 18ஆம் தேதி முதல் உலகில் உள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாநகரங்களிலும், 210க்கும் மேற்பட்ட நாடுகளிலும் இந்த ஆத்தாலஜி திரைப்படம் வெளியாகிறது. இதன் மூலம் மாடர்ன் லவ் என சர்வதேச அளவில் பிரபலமான இணைய தொடர், இந்தி, தெலுங்கு ஆகிய மொழியினை தொடர்ந்து தமிழிலும் தயாராகி இருக்கிறது. ” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ” நான் பாரம்பரிய பிடிப்புள்ள மனிதன். திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். வழக்கமான படைப்புகளில் இருந்து திசை மாறி புதுமையாக சொல்ல வேண்டும் என விரும்புவதுண்டு. இதனை எனது புதிய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சாத்தியப்படுத்தி இருக்கிறார். அவருடைய படைப்புகளில் வீரியமும், புதுமையும் இருக்கும். என்னை காதல் கதைகளை.. காதல் உணர்வுகளை.. காட்சிப்படுத்துவதில் மன்னன் என்று சொல்வதுண்டு. காதல் இல்லையேல் வாழ்க்கை இல்லை. காதலிக்கவில்லை என்றால் கலைஞனாக முடியாது. காதல் என்பது இதுதான் என எந்த வரையறையும் இல்லை. காதல் என்பது மென்மையானது

எனக்கு வயதாவதில்லை. வயதைக் குறித்து நான் எப்போதும் கவலைபட்டதில்லை. இன்றும் நான் இளைஞனாகவும், இளமையாகவும் உணர்கிறேன். இந்த 84 வயதிலும் காதலிக்கிறேன் என்பதனை தைரியமாக சொல்கிறேன்.

எனக்கு ஒன்பதாவது படிக்கும்போது ஒரு காதல் ஏற்பட்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தவுடன் இங்கும் மற்றொரு காதல் உண்டானது. அதன் பிறகு காலங்கள் மாற மாற நான்கு காதல்கள் ஏற்பட்டது.

நான்கு காதல்கள் இருக்கிறது என்கிறீர்களே..! இதில் எங்கே காதல்? என்று கேட்டால், இந்த குடை தான் நிழல் தரும் என கருதக்கூடாது. நமக்கு எந்தக் குடையும் நிழல் தரும் என நினைக்க வேண்டும். நிழல் தரும் அந்த நான்கு குடைகளையும் என்னால் மறக்க இயலாது. ஏனெனில் காதல் இல்லாமல் இருக்க இயலாது. காதல் தவிர்க்க முடியாதது. அவசியமானது.

‘பறவை கூட்டில் வாழும் மான்’ எனும் அத்தியாயத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக அமேசான் பிரைம், தியாகராஜன் குமாரராஜா, அதில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

https://smi.lnk.to/ModernLove-Chennai

இசைஞானி இளையராஜா இந்த பாணிகளான படைப்புகளுக்கு எம் மாதிரியான இசையை வழங்குவார் என்று ஆவலோடு காத்திருந்தேன் ஆனால் அவர் தன்னுடைய மாயாஜால வித்தை காட்டி என்னை அசத்தி விட்டார்.” என்றார்.

நடிகர் கிஷோர் பேசுகையில், ” பாரதிராஜா இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதே அரிது. அந்த வாய்ப்பை அளித்ததற்காக அமேசான் பிரைம் வீடியோ, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய விருது பெற்ற படைப்பாளிகளுடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது பெரும் பாக்கியம் என நினைக்கிறேன். இதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? இல்லையா? என்ற ஐயம் எனக்குள் இருக்கிறது. இந்த தருணத்தை வார்த்தைகளாக விவரிக்க தெரியவில்லை.

நான் எப்போதும் கலை மீதான ஈடுபாட்டை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என யோசிப்பேன். நம் படைப்பை பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு உந்துதலை மனதில் விதைக்க வேண்டும். அந்த வகையில் நான் நடித்திருக்கும் பறவைக் கூட்டில் மான்கள் எனும் அத்தியாயத்தில் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம், இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரம். இதன் படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க இயலாத பசுமையானவை. இந்தக் கதையில் விவரங்கள் நேர்த்தியாகவும், துல்லியமானதாகவும் விவரிக்கப்பட்டிருக்கும். இது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ” என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. திறமை வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவர்களின் திரைத்துறை மீதான பற்று அலாதியானது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி சக்திவேல் ஆகியோரின் பணியாற்றும் ஸ்டைல் தனித்துவமாக இருக்கும். ‘இமைகள்’ அத்தியாயத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கருடன் இணைந்து பணியாற்றியதும் மகிழ்ச்சியானது. இதனை நன்கு அனுபவித்து நடித்திருக்கிறேன். நிறைய நுட்பமான விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த அனுபவம் அற்புதமானது. இந்த படத்தில் டிஜே பானுவுடன் இணைந்து நடித்திருப்பதும் மகிழ்ச்சியானது. தியாகராஜன் குமாரராஜா சார் அழைப்பு விடுத்தவுடன் நடிக்க மனதளவில் தயாராக இருந்தேன். அதிலும் பாலாஜி சக்திவேல் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றதும் கதை எதையும் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவது எப்போதுமே இனிமையானதாக தான் இருக்கும். அதிலும் நல்ல அனுபவம் உள்ள பாலாஜி சக்திவேல் பணியாற்றும்போது. அவர் காட்சியை விவரிக்கும் விதம்.. நடிப்பை வாங்கும் விதம்.. மிகவும் உத்வேகம் அளிக்க கூடியதாக இருந்தது. அவரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறேன். இதுவரை அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. விரைவில் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகை விஜயலட்சுமி பேசுகையில்,” மாடர்ன் லவ் சென்னை என்பது தலைப்பு. என்னை பொருத்தவரை லவ் எப்போதும் மார்டன் தான். எந்த காலமாக இருந்தாலும் அந்த காலத்தை கடந்து ஒரு லவ் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் அமேசான் பிரைமில் வெளியாகும் மாடர்ன் லவ் சென்னை படத்தின் ஒரு அத்தியாயத்தில் நடித்தது… அதிலும் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்தது.. மறக்க இயலாத அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளுக்கு சிறிய இடைவெளி விட்டு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று சொல்லும் போது, சற்று சவாலானதாகவும், சிரமமாகவும் இருந்தது. நான் என்னை திரையில் பார்க்கும்போது வித்தியாசமாக இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன். வாழ்க்கை எப்போதும் அடுத்த வினாடிக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துக் கொண்டே இருக்கும்‌ இந்த அத்தியாயத்தில் பணியாற்றியதும் எனக்கு அப்படித்தான் இருந்தது.” என்றார்.

நடிகை டிஜே பானு பேசுகையில்,” சாதனையாளர்களுடன் இணைந்து அமர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வேடம் சற்று வித்தியாசமானது. கடினமானது கூட. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கும், அமேசான் ப்ரைம் வீடியோவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’: என்றார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ” இயக்குநர் தியாகராஜன் குமாராஜா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதிய கதையை இயக்கி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார் அந்த கதையை வாசித்த பிறகு மனதில் நிறைவு இருந்தது. அவருடைய எழுத்தை உயிர்ப்புடன் திரையில் காட்சிப்படுத்த வேண்டும் என தனி கவனம் செலுத்தினேன். என்னுடைய எழுத்தாக இருந்தால் சௌகரியத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்திருப்பேன். ஆனால் பாலாஜி தரணிதரனின் எழுத்து என்பதால்.. அதனை நேர்த்தியாக படம் பிடிக்கவே நினைத்தேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அதே தருணத்தில் அசோக் செல்வன், டிஜே பானு போன்ற சிறந்த கலைஞர்கள், தங்களுக்கு வழங்கிய கதாபாத்திரமாகவே மாற்றம் பெற்று நடித்தனர். ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறுவதற்கு சிறிது கால அவகாசம் எடுக்கும். ஆனால் ஒரு புதுமுகத்துடன் பணியாற்றும்போது அவர்கள் கதமா கதாபாத்திரமாக மாறி பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள். ‘இமைகள்’ அத்தியாயத்தைப் பொருத்தவரை நான் இயக்குநர் மட்டும்தான். ஆனால் கதாசிரியர் தான் இதன் ஜீவன்.

Click for Music Album Here – https://smi.lnk.to/ModernLove-Chennai

Title Track lyrical video here – https://youtu.be/ZDsJkLGgs_w

இந்த அத்தியாயத்தில் ஒரு பாடல் இடம் பிடித்திருக்கிறது. அதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நான், யுவன் சங்கர் ராஜாவுடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த வாய்ப்பினை அளித்த தியாகராஜன் குமாரராஜாவிற்கும், அமேசான் பிரைம் வீடியோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில், ” ஏழு வயதில் ஒரு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தங்குவதற்காக தயக்கம் தெரிவித்து அருகில் உள்ள திரையரங்கத்தில் பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ எனும் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னுடைய தந்தையார் என்னை முதன் முதலாக அழைத்துச் சென்றார். ஏழு வயதில் நான் பார்த்த முதல் திரைப்படமே காதல் திரைப்படம் தான். அந்த திரைப்படம் மனதில் ஏற்படுத்திய சலனங்கள், என்னுடைய ஆழ்மனதில் பதிந்தன. அந்தத் திரைப்படத்தை ஏறக்குறைய நூறு முறைக்கு மேல் பார்த்திருப்பேன். அதில் இடம்பெறும் அனைத்து வசனங்களும் எனக்கு அத்துபடி. இவைதான் என்னை கலை உலகத்திற்கு அழைத்து வந்திருக்கும். அத்தகைய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குநருடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான அனுபவம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கும் அமேசான் பிரைம் வீடியோவிற்கும் நன்றி.‌

கொரோனா காலகட்டத்தின் போது நண்பர் தியாகராஜன் குமாரராஜா போன் மூலம் தொடர்பு கொண்டு மார்டன் லவ் படைப்பை குறித்து பேசினார். அந்த காலகட்டத்தின் போது பலரும் மன அழுத்தத்தில் இருந்தனர். எனக்கு எதையாவது எழுதத் தொடங்கினால் உடனடியாக அரசியல் வந்துவிடுகிறது. இது மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்து விட்டது. இந்த மன சிக்கலிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நானே பல காலமாக திட்டமிட்டிருந்தேன். அதன் போது தியாகராஜன் குமாரராஜா மாடர்ன் லவ் என்று சொன்னதும் உடனடியாக ஒப்புக் கொண்டேன் அமேசான் பிரைம் வீடியோவின் மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரை கண்டு ரசித்தேன்.

அண்மையில் ஒரு வார இதழில் கதை ஒன்றுக்கு ஓவியம் வரைந்து அதன் மீது AI என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஓவியம் சிறப்பாக இருந்தது. அவர் ஓவியர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு என விவரித்தனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஓவியம் வரைய இயலும். அந்த இதழில் கவிதை ஒன்றையும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எழுதப்பட்டு, இடம் பெற்றிருந்தது. அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியையும் கண்டேன்.

உலகம் மாற மாற அனைத்துக்கும் ஒரு மாற்று வழி வந்து விட்டது. ஆனால் மனிதனுக்கு மாற்று கிடைக்காத ஒரே விசயம் காதல்தான். அன்பு செலுத்த இயந்திரங்களுக்கு தெரியாது. ஒருவேளை உடலுறவைக் கூட இயந்திரங்கள் வழங்கலாம். ஆனால் அன்பை செலுத்த தெரியாது. ஏனெனில் காதல் என்பது ஒரு உணர்வு. அதனால் தான் காதல் எப்போதும் அனைத்து இடத்தில் இருக்கிறது.

வன்முறை எண்ணங்களுக்கு மாற்று அன்பு மட்டும் தான். ஒரு சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்ல வேண்டும் என்றால், மக்களை அன்பு மயப்படுத்த வேண்டும். மனிதர்கள் அடிப்படையில் வேட்டையாடிகள் தான். இதைத்தான் அம்பேத்கரும், பெரியாரும், தேர்தல் அரசியலை தவிர்த்து மக்களை மனித நேயத்திற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தினர். அன்பை போதிப்பது காதல் மட்டும் தான்.

காதலின் அனைத்து கோணங்களும் இந்த அத்தியாயங்களில் இடம் பிடித்திருக்கிறது. இன்றைய சூழலில் கிரைம் திரில்லர், ஆக்சன் படைப்புகள் அதிகம் வெளியாகி மக்களின் மனதை திசை திருப்பி அழைத்துச் செல்கிறது. இத்தகைய சூழலில் காதலை முதன்மைப்படுத்தி படைப்பை உருவாக்குவது அவசியமானது. இதன் காரணமாகத்தான் இந்த அத்தியாயத்தை இயக்க ஒப்புக் கொண்டேன்.

‘லாலாகுண்டா பொம்மைகள்’ என்பது சென்னையில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதியில் நடைபெறும் கதை. நாம் அனைவரும் பொம்மைகள்தான். ” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் பேசுகையில், ” இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னை நம்பி திரைக்கதையை அனுப்பினார். அதனை முழுவதுமாக வாசித்த போது, அது கதையின் நாயகிக்கு அவர்களுடைய பார்வையில் கதையை சொல்வது போல் இருந்தது. இதனை ஒரு பெண் இயக்குநர் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று மனதில் உதித்தது. அமேசான் பிரைம் வீடியோ, பாரதிராஜா, பாலாஜி சக்திவேல் ராஜுமுருகன் ஆகியோர் பணியாற்றுகிறார்கள் என்று சொன்னவுடன் உடனடியாக இயக்க ஒப்புக்கொண்டேன். பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காகத்தான் ‘கண்ணுல ஹார்ட் இருக்கிற இமோஜி’ என டைட்டில் வைத்தேன். இந்தக் கதையை எழுத்தாளர் ரேஷ்மா கட்டலா நேர்த்தியாக எழுதியிருக்கிறார். அவர்களை சந்தித்து பேசி உரையாடிய பின் இயக்குவதற்கு தயாரானேன். இந்த படத்திற்குப் பொருத்தமானவர் என்பதற்காக ரித்து வர்மாவை தேர்வு செய்து அனுப்பினேன் தயாரிப்பாளர்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்த அத்தியாயத்தில் ரித்து வர்மாவுடன் சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் நாகராஜன் ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ” என்றார்.

நடிகை ரித்து வர்மா பேசுகையில், ” காதல் உறவுகளை பற்றி ஆறு அத்தியாயங்களில் பேசியிருக்கும் படைப்பு. வாழ்க்கையில் காதல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விவரிக்கும் படைப்பாக இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் இடம் பெறும் என்னுடைய கதாபாத்திரத்திற்கும், எனக்கும் பெரிதாக ஒற்றுமை இல்லை. ஏனெனில் எனக்கு காதல் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இந்தப் படைப்பில் பட குழுவினருடன் இணைந்து பணியாற்றிய போது மறக்க இயலாத அனுபவமும், அன்பும் கிடைத்தது. மாடர்ன் லவ் சென்னையை பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.” என்றார்.

இந்தத் தொடரில் இடம் பெறும் ‘மார்கழி’ எனும் அத்தியாயத்தைப் பற்றி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேசுகையில், ” மார்கழி எனும் அத்தியாயத்தின் கதையை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதியிருக்கிறார். அக்ஷய் சுந்தர் இயக்கியிருக்கிறார்.. பரங்கிமலை பின்னணியில் மார்கழி மாதத்தில் நடைபெறும் வளரிளம் பருவத்தினரின் காதலை சொல்லியிருக்கும் படைப்பு. ஒரு ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தினரின் கதையாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

‘நினைவோ ஒரு பறவை’ எனும் அத்தியாயம் குறித்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேசுகையில், ” முதலில் இந்த அத்தியாயத்தை இயக்கும் எண்ணமில்லை. கடைசி நிமிட தருணத்தில் இதனை இயக்க வேண்டிய கட்டாய சூழல் உருவானது. இதில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர்களும், இயக்க ஒப்புக்கொண்ட இயக்குநர்களும் வேறு பணிகள் இருந்ததால், கடைசி தருணத்தில் இதனை எழுதி இயக்கினேன். வாமிகாவுடன் இதற்கு முன் இணைந்து பணியாற்றிய வேண்டிய வாய்ப்பு இருந்தது. வெவ்வேறு காரணங்களால் அது நடைபெறவில்லை. இந்த அத்தியாயத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ” என்றார்.

மே 18 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படத்தில் ஆறு அத்தியாங்கள் இடம்பெற்றுள்ளன.

1.”லாலாகுண்டா பொம்மைகள்” – ராஜுமுருகன் எழுதி, இயக்கியுள்ள இந்த அத்தியாயத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இதில் ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.

2.“இமைகள்” – பாலாஜி தரணீதரன் கதை எழுத, பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கிறார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதில் அசோக் செல்வன் மற்றும் டி.ஜே. பானு நடித்துள்ளனர்.

3.“காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி” – ரேஷ்மா கட்டலா கதை எழுத, கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இதில் ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

4.“மார்கழி” – பாலாஜி தரணீதரன் கதை எழுத, அக்‌ஷய் சுந்தர் இயக்கியிருக்கிறார். விகாஸ் வாசுதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங் மற்றும் ஸ்ரீகிருஷ்ண தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

5.“பறவை கூட்டில் வாழும் மான்கள்” – பிரதீப் குமார் .எஸ் கதை எழுத, பாரதிராஜா இயக்கியிருக்கிறார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் கிஷோர், ரம்யா நம்பீசன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

6.“நினைவோ ஒரு பறவை” – இந்த அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. நிரவ் ஷா மற்றும் ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்யி, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் வாமிகா மற்றும் பிபி நடித்துள்ளனர்.