பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை: லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள் ஈடுஇணையற்றது’ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், ‘லதா மங்கேஷ்கரின் மறைவு பெரும் வேதனை தருகிறது; அவர் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/rashtrapatibhvn/status/1490181753054822400
‘லதா மங்கேஷ்கரின் குரல் பல தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். ‘தனது தேன் குரலால் 80 ஆண்டுகளாக அனைவரையும் மகிழ்வித்தவர் லதா மங்கேஷ்கர்’ என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1490194485195653124
லதா மங்கேஷ்கரின் மறைவை ஒட்டி 2 நாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
https://twitter.com/RahulGandhi/status/1490185310881386496
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தன்னுடைய இரங்கல் செய்தியில், “இந்தியாவின் இசைக்குயில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் கொடிகட்டி பறந்த செல்வி. லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அம்மையாருக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தாருக்கும், இசைத் துறையினருக்கும் எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/OfficeOfOPS/status/1490205611564273664
1929ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பிறந்த லதா, 1942ஆம் ஆண்டில் தனது இசைப்பயணத்தை தொடங்கினார். தேனினும் இனிய குரலால் சுமார் 80 ஆண்டு காலம் இந்திய மக்களை மகிழ்வித்தவர் லதா மங்கேஷ்கர். இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படப்பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் சத்யா படத்தில் “வளையோசை கலகலவென.” என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டது.
திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் 1989ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் பெற்றார். 1999ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் இவர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 92 வயதான பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். உரிய சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தேறி வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில், அவரது உடல் நிலை மோசமடைந்திருப்பதால், மீண்டும் அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நேற்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் லதா மங்கேஷ்கர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.