பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. ‘தேர்தல் செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் எண்ணப்பட்டு வந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகியிருந்தது. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின. நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசம் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் பாண்டவர் அணி சார்ப்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பாக்யராஜ் 1054 வாக்குகள் வாங்கிய நிலையில் நாசர் 1701 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவர் ஆகிறார். அதேபோல பொதுச்செயலாளராக மீண்டும் நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக நடிகர் கார்த்தி தேர்வாகியுள்ளார்.
வெற்றி பெற்ற நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள்:1. குஷ்பூ 14072. கோவை சரளா 1399
3. ராஜேஷ் 1384
4. மனோபாலா 1372
5. அஜய் ரத்தினம் 1365
6. பசுபதி 1335
7. ஜூனியர் பாலயா 1312
8. சிபிராஜ் 1296
9. லதா 1288
10. விக்னேஷ் 1279
11. சோனியா 1277
12. பிரசனா 1275
13. நந்தா 1272
14. ரமணா 1258
15. தளபதி தினேஷ் 1258
16. சரவணன் 1247
17. பிரேம்குமார் 1242
18. ஸ்ரீமான் 1241
19. ஜெரோல்ட் 1184
20. ரத்தனப்பா 1137
21. மா பிரகாஷ் 1106
22. வாசுதேவன் 1105
23. ஹேமச்சந்திரா 1077
24. காளிமுத்து 1075
வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, “ 2015 முதல் 2019 வரை நடிகர் சங்க வரலாற்றில் முக்கியமான நாட்கள். எங்கள் டீம் சொந்த வாழ்க்கையை, நேரத்தை தியாகம் செய்து உழைத்தார்கள். இப்போது கிடைத்துள்ள வெற்றி 2 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ளது. நடிகர் சங்கக் கட்டிடம் முடிவுற்று அதிலிருந்து வரும் வரும் வருமானம் தான் எதிர்கால சந்ததிக்கு உதவப்போகிறது.” என்று தெரிவித்தார்.
பதவிக்கால குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, “பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் 3 ஆண்டுகள் கிடைத்துள்ளது. கட்டிடத்தை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த கார்த்தி, அனைவருடனும் இணைந்து இணக்கமாக செயல்படுவோம் என உறுதியளித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, “கண்டிப்பாக. ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கு பின்னும் முதலமைச்சரை சந்திப்பது மரபு” என்று தெரிவித்தார். நிதிச் சிக்கல் நிறைய இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக சரி செய்வோம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.