பாடகி ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிக்கும் லைசென்ஸ் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டவர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி. இவர்கள் பல பாடல்களை டிவியிலும் திரைப்படங்களிலும் பாடியுள்ளனர். ‘ஏ.. என்ன மச்சான், சொல்லு புள்ள’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர்கள் கலந்துகொண்ட சூப்பர் சிங்கர் போட்டியில் செந்தில் கணேஷ் விடாமுயற்சியால் ஃபைனலுக்கு சென்று வென்றார்.
தற்போது திரை உலகிலும் பல பாடல்களை பாடி வரும் இவர்களுள் செந்தில் கணேஷ் சில படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து இருளி என்கிற படத்தில் நடித்து வருகின்றனர். முன்னதாக அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய ‘வாயா சாமி’ பாடல் தமிழில் ஹிட் அடித்தது. இந்த நிலையில் செந்தில் கணேஷின் மனைவி ராஜலட்சுமி, திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார்.
ஆம், ராஜலட்சுமி தற்போது ‘Licence’ எனும் படத்தில் நடிக்கிறார். கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதுடன், இந்த பட விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இப்படம் குறித்து பேசிய ராஜலட்சுமி, “இப்பட விழாவுக்கு வந்திருக்கும் சான்றோர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் கணபதி பாலமுருகன் சார், சமூகத்துக்கான ஒரு வலிமையான கதையை கொண்டு வந்துள்ளார். அதற்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் என் பெயர் பாரதி. தேடிச்சோறு நிதந்தின்று எனும் பாரதியிடன் பாடலுக்கு இணங்க ஒவ்வொரு பெண்ணுக்கும் இன்னொரு சக பெண்ணுக்கு அநீதி நடக்கும்போது, அதுவும் அப்பெண் ஆசிரியராக இருக்கும்போது ஏதாவது செய்யவேண்டும் என தோன்றும். அதை சுற்றியே இந்த கதை.” என பேசியுள்ளார்.
மேலும் பேசியவர், “தன்னுடன் சேர்ந்து இயங்கும் ஒரு பெண்ணுக்கு சப்போர்ட் பண்ணுவதற்கு ஆணுக்கு ஒரு பெரிய மனது வேண்டும். அந்த வகையில் என் முதுகெலும்பு, வழிகாட்டி என் கணவருக்கும் நன்றி” என குறிப்பிட்டு பேசினார். இதேபோல் இப்படம் குறித்து பேசிய செந்தில் கணேஷ், தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன், பின்னர் இருவரும் மேடையிலேயே ‘அம்மா’ குறித்த உருக்கமாக பாடினர்.