பருத்திவீரன் வெளியாகி 15 ஆண்டுகள் : அனைத்துப் புகழும் அமீர் சாருக்கே – கார்த்தி நெகிழ்ச்சி

0
117

பருத்திவீரன் வெளியாகி 15 ஆண்டுகள் :
அனைத்துப் புகழும் அமீர் சாருக்கே
– கார்த்தி நெகிழ்ச்சி

நடிகர் கார்த்தி திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி காமன் டிபி வெளியிட்டுள்ளார்கள் அவரது ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி கடந்த 2007 ஆம் ஆண்டு அமீரின் ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமானார். அந்த ஆண்டு வெளியான படங்களில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்ததோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. கார்த்தி, பிரியாமணி என ஒவ்வொருவரும் எதார்த்தமாக நடித்தார்கள் என்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை உயிரோட்டமாக அமைந்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

என்னதான் நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ’நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ’சிறுத்தை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாமான கதைக்களங்களில் தன்னை பொருத்திக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கியதாலேயே தமிழின் முன்னணி நடிகரானார் கார்த்தி. அதுமட்டுமல்லாமல், விவசாயிகளுக்காக தனது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து நிஜத்திலும் ஹீரோ என்று பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கார்த்தி ஹீரோவாக அறிமுகமான ‘பருத்தி வீரன்’ பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது. இதனால், அவர் சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியுள்ளதாவது:

‘பருத்திவீரன்’ படத்துடன் என்னுடைய திரைவாழ்க்கை தொடங்கியதில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டது. அனைத்துப் புகழும் அமீர் சாரையே சேரும். நான் கற்றுக் கொண்ட பல்வேறு படங்களில், வேலையை ஈடுபாட்டோடு ரசித்துச் செய்ய வேண்டும் என்று அவர் கற்றுக் கொடுத்த முறையை இன்றும் பின்பற்றி வருகிறேன். இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல், அண்ணா மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.