நெல்சனை தொடர்ந்து கனா பட இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்

0
97

நெல்சனை தொடர்ந்து கனா பட இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் 169-வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக கடந்த பத்தாம் தேதி, அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்துக்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அப்படத்தை இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்குவார் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக ஆங்கில தளமொன்றில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம், ஆர்டிக்கிள் 15 என்ற இந்திப்படத்தின் ரீமேக் ஆகும். இதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்துக்காக அருண்ராஜா காமராஜ் ஒரு கதை தயாரித்திருக்கிறார்.

அக்கதையை, தயாரிப்பாளர் போனி கபூர் – ராகுலிடம் கூறியிருக்கிறார். அவர்களுக்கு கதை பிடித்து போகவே, அவர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் நேரம் வாங்கி, போயஸ் கார்டனிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவரிடமும் கதை சொல்ல ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. கதை ரஜினிக்கு பிடித்துப்போனதால், அவர் படத்துக்கு ஓகே சொல்லி விட்டதாக ஆங்கில தளங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன.

போனி கபூர் – ராகுல் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இக்கூட்டணி, நடிகர் அஜித்தின் 61-வது படத்துக்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அருண்ராஜா காமராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் கபாலி, காலா, தர்பார் ஆகிய படங்களில் `நெருப்புடா’ `தங்க சிலை’ `கற்றவை பற்றவை’ `கண்ணுல திமிரு’ உள்ளிட்ட பாடல்கள் பல வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றிலெல்லாம் அருண்ராஜா காமராஜ் பாடலாசிரியராக இருந்திருந்தார். தற்போது அவரேவும் நடிகர் ரஜினிகாந்தை இயக்கவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து இளம் இயக்குநர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நிலையில், தற்போது தனது 170-வது படத்தையும் இளம் இயக்குநருக்கே கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகத்தை தந்திருக்கிறது. தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் அதிகாரபூர்வமாக வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.