நிவின்பாலி நடிக்கும் கனகம் காமினி கலகம் ; டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் வெளியாகும் முதல் மலையாள படம்

0
117

நிவின்பாலி நடிக்கும் கனகம் காமினி கலகம் ; டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் வெளியாகும் முதல் மலையாள படம்

இந்தியாவில் உள்ள முன்னணி ஒடிடி தளங்களில் ஒன்றான டிஸ்னி ஹாட்ஸ்டார், மலையாள படங்களை திரையிடுவதற்கு தயாராகி வருகிறது.

அந்தவகையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள கனகம் காமினி கலகம் படத்தை முதன்முறையாக திரையிட இருக்கிறது.

இந்தப்படத்திற்கு கதை எழுதி இயகியுள்ளார் ரதீஸ் பாலகிருஷ்ண பொதுவால். இவர் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்தப்படம் தான் தற்போது கூகுள் குட்டப்பா என்கிற பெயரில் தமிழில் ரீமேக்காகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக கிரேஸ் ஆண்டனி நடிக்க, முக்கிய வேடத்தில் வினய் போர்ட் நடித்துள்ளார்.

பாலி ஜூனியர் பிக்சர்ஸ் சார்பில் நிவின்பாலியே இந்தப்படத்தை தயாரித்தும் உள்ளார். இந்தப்படத்தின் போஸ்டர் நேற்று (அக்-15) சோஷியல் மீடியாவில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நிவின்பாலி கூறும்போது, “பொழுதுபோக்கை நாம் எல்லோரும் விரும்புகிறோம்.. இயக்குநர் ரதீஸ் இந்த கதையை என்னிடம் சொன்னபோது, தற்போதைய கடினமான காலகட்டத்தில் உள்ள மக்களின் முகத்தில் புன்னகை என்கிற வெளிச்சத்தை நிச்சயம் கொண்டுவரும் என உணர்ந்தேன்.

இந்த கனகம் காமினி கலகம் படம் குடும்பங்கள் ரசிக்கும் வேடிக்கையான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட படம். அற்புதமான கதாபாத்திரங்கள், ஆச்சர்யப்பட வைக்கும் கதை நிகழ்வுகள், அருமையான நகைச்சுவை என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த கனகம் காமினி கலகம் படம் நிச்சயமாக மக்களின் முகத்தில் கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த சிரிப்பை மீண்டும் வரவழைக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்கிறார்.

இயக்குநர் ரதீஸ் பொதுவால் கூறும்போது, “இந்தப்படத்தில் புத்திசாலித்தனமான நகைச்சுவை காட்சிகள் நிறைய இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்களுடன் கச்சிதமான கதையும் காட்சிகளும் இதற்குமுன் பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும். மொத்தத்தில் ரசித்து பார்க்கக்கூடிய மிகச்சிறந்த அம்சங்களுடன் பொழுதுபோக்கு நிறைந்த படமாக இருக்கும்” என்கிறார்.

இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.