நான் எப்போதும் ஹீரோ தான் – ‘3.6.9’ விழாவில் பாக்யராஜ் பேச்சு!

0
119

நான் எப்போதும் ஹீரோ தான் – ‘3.6.9’ விழாவில் பாக்யராஜ் பேச்சு!

பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக வெளியான இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

தயாரிப்பாளர் பி ஜி எஸ் சரவணகுமார் பேசியதாவது…

எங்களுக்கு ஒரு ஐடியாவாக தோன்றியதை செய்யலாம் என முடிவெடுத்து திட்டமிட்டோம். பாக்யாராஜ் சாரிடம் சொன்ன போது அவர் வழிகாட்டினார், எல்லாம் நல்லபடியாக நடந்தது, உங்களுக்கு படம் பிடிக்குமென நம்புகிறோம் நன்றி.

நடிகர் ஆரி பேசியதாவது…

இந்த படத்திற்கு வருமுன் படத்தை பற்றிய விசயங்களை கேட்டேன். சயின்ஸ் பிக்சன் படம் என்றார்கள். ‘3.6.9’ எனது கார் நம்பர். அந்த நம்பர் பற்றி பலர் சொன்ன பிறகுதான் தெரிந்தது. உலகில் எந்த விசயத்தை எடுத்து கொண்டாலும் அது ‘3.6.9’ நம்பரில் அடங்கிவிடும். அப்படியான பவர் அந்த நம்பருக்கு உண்டு. அந்த கருத்தில் தான் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இங்கு பேசிய படக்குழுவினர் அனைவரும் அவர்களின் தாய் தந்தையரை வாழ்த்தி பேசியது பிடித்திருந்தது. இப்போது சினிமாவில் ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் Vs கேஜிஎஃப். முதலில் இதை ஓப்பிடுவதே தவறு. கேஜிஎஃப் ஒரு பான் இந்திய படம், ஆனால் பீஸ்ட் ஒரு மொழிக்கான படம், அதற்காக பீஸ்டை தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு. தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்கு தான் ஒத்த செருப்பு போன்ற படம் வந்தது. உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட நாயகன் படமும் இங்கு தான் உருவானது. தமிழ் படங்களை தாழ்த்தி பேசக்கூடாது. இதோ இந்தப்படமும் 81 நிமிடத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படி பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும். முன்னெடுத்து செல்ல வேண்டும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். பாக்யராஜ் சார் 21 வருடங்கள் கழித்து நாயகன் என்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் ஹீரோ தான். அவரளவு சாதனைகள் எவரும் செய்ய முடியாது. சின்ன வீடு எனும் அடல்ட் படத்தை கூட குடும்பத்தோடு பார்க்கும் படி எடுப்பவர். ஒரு அடல்ட் படம் எப்படி எடுக்க வேண்டும் என அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மாதிரி அடல்ட் படம் எடுத்தால் நான் நடிக்க தயார். இப்போது கூட அவர் நடிக்கும் படங்களில் சாதனை செய்கிறார். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நடிகர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமனண் பேசியதாவது….

இன்றைய திரைப்பட உலகம் வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு பக்கம் 1000 கோடியில் படமெடுக்கிறார்கள், பாக்யராஜ் சிஷ்யன் பார்த்திபன் ஒரு ஷாட்டில் படமெடுத்தார். இங்கே இவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்கள். ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இவர்களின் தைரியமும் திட்டமிடலும் கவர்கிறது. இயக்குநரின் தெளிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் . தமிழ் சினிமாவில் தற்போது திரைக்கதை தான் பெரிய சிக்கலாக இருக்கிறது. எந்த படத்திலும் திரைக்கதை சரியில்லை என்று தான் முதலில் பேச்சு வருகிறது, திரைக்கதையில் வித்தகரான பாக்யராஜ் இப்போது இருக்கும் திரை ஆர்வலர்களுக்கு ஒரு திரைக்கதை வகுப்பை நடத்த வேண்டுமென இங்கு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

இயக்குநர் நடிகர் பாக்யராஜ் பேசியதாவது…

21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன் நான் எப்போதும் ஹீரோ தான். இங்கு இயக்குநர் என்னை படைத்த அப்பா அம்மாவுக்கு என ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. நான் இதுவரை கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள் இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தாரகள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது .ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்தில் நான் மறந்து விடுவேன் என பாண்டி எனக்கு டயலாக் சொல்லி அசத்தினார். அனைவரும் சிறப்பாக நடித்து படத்தை எடுத்து விட்டார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரன் பேசியதாவது…

இந்தப்படம் ஒரு மிகப்பெரிய முயற்சி. 450 க்குமேற்பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் பின்ணனியில் வேலை பார்க்க 75 நடிகர்கள் நடித்தார்கள். அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசியதாவது..

எனக்கு ஒரு கனவு இருந்தது. என் தந்தையின் காலத்து நாயகர்களுக்கு இசையமைக்க வேண்டுமென்பது என் ஆசை. அது இந்தப்படத்தில் நிறைவேறியிருக்கிறது. பாக்யராஜ் சார் படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பை தந்த சிவ மாதவ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எப்படி எடுக்க போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் படத்தை சிறப்பாக திட்டமிட்டு எடுத்து விட்டார்கள். எல்லோருக்கும் நன்றி. ஒரு சாதனை படைப்பில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

இயக்குநர் சிவ மாதவ் பேசியதாவது…

சினிமாவுக்கு வரவேண்டும் என முடிவெடுத்த போது, சினிமாவில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்தேன். ஏனெனில் இங்கு இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பாவான்கள். அவர்களை மிஞ்ச முடியாது. ஆனால் அவர்கள் செய்யாத விசயத்தை முயற்சி செய்யலாம் என நினைத்தேன். அதே போல் சிந்தனையில் தயாரிப்பாளர் சரவணன் இருந்ததால் அவருடன் பயணிக்க முடிந்தது. நான் தனித்துவமாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கு சினிமாவில் உருவம் கொடுத்து உயிர் தந்தவர் பாக்யராஜ் சார். அவரிடம் முழு கதையையும் விவாதித்தேன். அவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் நடித்து கொடுத்துவிட்டார். என் தம்பி தான் ஒளிப்பதிவாளர் அவனிடம் முதலில் இந்த ஐடியாவை சொல்லி செய்ய முடியுமா? என்று கேட்டேன், முடியும் என்றான், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. என்னை புரிந்து கொண்டு என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. நான் உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், படம் பார்க்கும் போது உங்களுக்கு அது தெரியும். 369 படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: சிவ மாதவ்,
ஒளிப்பதிவு மாரீஸ்வரன்,
இசை கார்த்திக் ஹர்ஷா
படத்தொகுப்பு ஸ்ரீநாத்
தயாரிப்பு பி ஜி எஸ் சரவணகுமார்.
இணை தயாரிப்பு கேப்டன் எம் பி ஆனந்த்.