நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சோசியல் மீடியாவில் ஷாருக்கான்
ஆர்யன் கான் சர்ச்சைக்குப்பிறகு நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆகியுள்ளார் நடிகர் ஷாருக்கான்.
கடந்த வருடம் அக்டோபர் 2-ஆம் தேதி ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டடு ஒரு மாதம் சிறையில் இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. ஆர்யன் கான் கைது நடவடிக்கைக்குப்பிறகு வேதனைக்குள்ளான ஷாருக்கான், நடித்துக்கொண்டிருந்த படங்கள், படப்பிடிப்பு சார்ந்த பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மகனின் ஜாமீனுக்காக சிறைக்கு அடிக்கடி சென்று சந்தித்து வந்தார்.
இதனால், அட்லீ படத்தின் படப்பிடிப்பும், ‘பதான்’ படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஷாருக்கான் எந்தப் பதிவும் செய்யாமல் அமைதி காத்துவந்தார். கடைசியாக செப்டம்பர் 19 ஆம் தேதி அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப்பிறகு ஷாருக்கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்துள்ள எல்ஜி விளம்பரத்தின் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அவர் பதிவிட்ட 1 மணிநேரத்திலேயே 11 ஆயிரம் கமெண்டுகளுக்குமேல் குவிந்துள்ளது. ‘வெல்கம் ஷாருக்’ என்று அவரது ரசிகர்கள் உற்சாகமுடன் கருத்திட்டு வருகிறார்கள்.