நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

0
65

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், நடிகை மீரா மிதுன் மீது, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரும், கேரளாவில் ஒரு ஓட்டலில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டநிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்று வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் ஆஜராகவில்லை என்பதால், அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மீரா மிதுனை, போலீசார் கடந்த 25-ம் தேதி கைது செய்து முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதையடுத்து அவரை ஏப்ரல் 4-ம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை, வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து, நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.