“நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சால்வை அணிவித்து வாழ்த்து!!”
தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு அமைப்புகள் மூலம் பிரச்னை வரும்போது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் உதவுவது அவசியம் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர்,பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் , அதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி
பெற்றனர்.
பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணி சார்ந்த தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர் பூச்சி முருகன், வெற்றிபெற்ற நிர்வாகிகள் பலர் , சென்னை தலைமை செயலகத்தில் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதில் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட சில படங்களுக்கு பிரச்னை வரும்போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்னை வரும்போது சட்டப்படியாக நடிகர்சங்கம் உதவுவது அவசியம் எனத் தெரிவித்தார். எனவே, அதை நடிகர் சங்கம் செய்யும் எனவும் கார்த்தி கூறினார்.
அதனைத்தொடர்ந்து விஷால் கூறியதாவது,
”தேர்தல் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து எண்ணிக்கை நடைபெற்றது இதுதான் முதல் முறை. வேறு எங்கும் இது போன்று நடந்திருக்காது. தேர்தலை நடத்திக்கொடுத்த ஓய்வு பெற்ற பத்மநாபன் அவர்களுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் நடத்த ஆகும் செலவை கட்டடம் கட்டலாம் என நினைத்தோம். அனைவரையும் அரவணைத்துச் செல்லாம் என திட்டமிட்டோம். ஆனால், அவர்கள் போட்டியாக பார்த்தார்கள்.
நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகத்தான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம். அது நல்லபடியாக நடக்கும். நடிகர் சங்க கட்டடத்திற்கு இன்னும் நான்கு மாதம் கொடுத்திருந்தால் முடித்திருப்போம். தற்போது 30% விலையேற்றம் கண்டுள்ளது. 21 கோடி நிதி தேவைப்படுகிறது. தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது தனிமனிதர் சம்பந்தப்பட்டது அல்ல. பல குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. எனவே அவர் எங்களுக்கு உதவி செய்வார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பூச்சி முருகன், ‘சங்க விதிப்படி பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி காலம் உள்ளது. எனவே அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாங்கள் கட்டாயம் பதவியில் இருப்போம். நலிந்த நடிகர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில் மண்டபம் கட்டி தங்க வைக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
“நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சால்வை அணிவித்து வாழ்த்து!!”
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், நடிகர் சங்கத்துணை தலைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவருமான பூச்சி முருகன் மற்றும் நடிகர் மனோபாலா , செயற்குழு உறுப்பினர் நடிகர் சரவணன் உள்ளிட்டோரை 65 -ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட நமது “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் அதன் தலைவர் D.R.பாலேஷ்வர், செயலாளர் R.S.கார்த்திகேயன் , பொருளாளர் மரிய சேவியர் ஜாஸ்பெல், துணைத்தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.